மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு!

பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு!

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் மிகவும் புகழ்பெற்றவர் எம்.ஜி.சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீனச் சிந்தனையாளர் அறிமுக நூல்கள்' என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவு எனலாம். சிங்கப்பூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவர், மூச்சு திணறல் காரணமாக நேற்று (அக்டோபர் 2) காலமானார். அவருக்கு வயது 64.

1970களில் தமது எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் தீபம், கணையாழி உள்ளிட்ட இதழ்களில் கவிதை எழுதினார். இளவேனிலின் தூண்டுதலால் எழுதிய இவருடைய முதல் சிறுகதை கார்க்கி பத்திரிகையில் வெளிவந்தது. பின்நவீனத்துவத்தில் ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் கொண்டவர். பின் நவீனத்துவம் சார்ந்து பல படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்.

“பின் நவீனத்துவம் நமது கலை, இலக்கிய , மொழி மேம்பாட்டிற்கு மிக அவசியமானது. இந்தியாவில் பின் நவீனத்துவத்தை ஓர் இருண்மையான வடிவம் என்கிற அளவில் புரிந்து வைத்துக்கொண்டு இருண்மையைத் தேடியே அதற்கான புரிதல்களை நகர்த்துகிறார்கள்” என்று பின் நவீனத்துவம் குறித்து தனது வலுவான சிந்தனைகளை முன்வைக்கிறார் எம்.ஜி.சுரேஷ். இவர் பன்முகம் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.

சோதனை முயற்சி நாவல்கள் என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தைத் தன் இயல்பான கதைகூறு திறத்தால் உடைத்தவர் எம்.ஜி. சுரேஷ். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும் வைத்திருப்பவை. பல்வேறு பரிமாணங்களுடன் வண்ணப் பொலிவுடன் மிளிர்பவை.

கலைஞர் மு.கருணாநிதியின் 'காவலுக்குக் கெட்டிக்காரன்' திரைப்படத்திலும், தென்பாண்டிச் சிங்கம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் பணியாற்றியுள்ளார். தங்கர்பச்சானின் அழகி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon