மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

முதியோர்களுக்கு அரசு சலுகை!

முதியோர்களுக்கு அரசு சலுகை!

‘மத்தியப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும்’ என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதற்காக, அம்மாநில அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் நேற்று (செப்டம்பர் 02) உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. மத்தியப்பிரதேசத்திலும் அதற்காக ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “எங்கள் மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களை இந்த அரசு கலங்க விடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வகை சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளை நாம் அரசு சார்பில் வழங்குவோம். இதற்காக, விரைவில் ஒரு புதிய திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், ஆதரவின்றி தனியாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்துவரும் முதியோர்கள் பயன் பெறுவார்கள். தம் வயதான காலத்தில் அனைத்து முதியோரும் மகிழ்வுடன் வாழும் வகையில் அவர்களுக்கு அரசு துணை நிற்கும்” என்றார்.

இதற்காக அவசர உதவிக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்படும். அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் ஒரு முதியோர் பஞ்சாயத்து நடத்தி அதில், அனைவரும் கவுரவிக்கப்படவுள்ளனர். இதில், முதியோருக்காக ஒரு சிறப்பு பூஜையும் நடத்தப்படும்.

இந்த விழாவில், முதல்வருடன் 100 வயது நிரம்பிய புனியாபாய் மற்றும் கன்னையாலால் ஆகிய இருவரும் அமர வைக்கப்பட்டனர். முதியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவின் பார்வையாளராக திரளான முதியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்காக சில சிறப்பு உணவு வகைகளுடன், உடல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon