மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு!

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அரசு!

‘தமிழக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தினகரன் அணி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து நோட்டீஸ் கொடுக்க தூண்டியதாக தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், கர்நாடக மாநில அதிமுக செயலாளார் புகழேந்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தினகரன், “காவல்துறை கைக்குள் வைத்திருப்பதால் அரசு பொய் வழக்கு போடுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று (அக்டோபர் 02) செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “தமிழக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. எங்களை தேச துரோக வழக்கு போட்டு பயமுறுத்த நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது முயற்சி எப்போதும் எடுபடாது. மேலும், நாங்கள் புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்களின் கட்சி அதிமுக தான்” என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon