மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

தேசிய விருதைத் திருப்பித்தருவது முட்டாள்தனமா?

தேசிய விருதைத் திருப்பித்தருவது முட்டாள்தனமா?

கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இறப்பைக் கொண்டாடியவர்கள் குறித்து, அவருக்கான நினைவேந்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக நேற்று (02.10.17) முழுக்க பேசப்பட்டது.

பிரகாஷ் ராஜின் பேச்சில் ஹைலைட்டான விஷயங்கள் “என் தேசிய விருதைத் திருப்பித் தரலாம் என்றிருக்கிறேன். மோடி ஏன் அமைதியாக இருக்கிறார். அவர் மகா நடிகர் ஆகியவை. பிரகாஷ் ராஜ் பேசியதாகக் கூறப்பட்ட இந்த மூன்றில் இரண்டு சரி, ஒன்று தவறான தகவல். கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் பேசியதை மொழியாக்கம் செய்த தமிழக பத்திரிகையாளர் யாரோ ஒருவர் தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு இத்தகைய செய்தியை உருவாக்கியதும், அது மிகப்பெரிய அளவில் பரவிவிட்டது. இதையறிந்த பிரகாஷ் ராஜ் உண்மையாகச் சொன்னதை தற்போது விளக்கியிருக்கிறார்.

நான் இதுவரை ஐந்து தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறேன். அந்த தேசிய விருதுகளுக்குத் தகுதியானவனாக என்னை நினைத்தேன். ஆனால், என்னைவிட சிறப்பாக நடிக்கக்கூடிய ஐந்து பேரை இப்போது கண்டுபிடித்துவிட்டதால், இதை அவர்களுக்கு கொடுக்கலாம் என நினைக்கிறேன். அவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று பிரகாஷ் ராஜ் பேசியபோது தெரிவித்திருக்கிறார். இதில் ‘என்னைவிட சிறந்த நடிகர்களுக்கு கொடுக்க நினைக்கிறேன்’ என பிரகாஷ் ராஜ் கூறியதை, ‘தேசிய விருதைத் திரும்ப அளிக்கிறேன்’எனக் கூறியதாக தவறுதலான மொழிமாற்றம் செய்துவிட்டதால் உருவான வதந்திதான் இது. ஆனால், பிரகாஷ் ராஜுக்கு இருக்கும் அந்த எக்ஸ்ட்ரா அறிவு எப்போதும் கொஞ்சம் துறுத்திக்கொண்டுதான் நிற்கும். எனவே, என் உழைப்புக்குக் கிடைத்த தேசிய விருதுகளை நான் பெருமைகளாக நினைக்கிறேன். தேசிய விருதுகளைத் திரும்பத் தருவதற்கு நான் என்ன முட்டாளா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மத்திய அரசு வழங்கும் தேசிய விருதைவிட எவ்வளவோ பெரிய விருதுகளையெல்லாம் திரும்பக்கொடுத்த கதை இவ்வுலகில் உண்டு. அப்படிக் கொடுத்தவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல என்பதை அறியாத அளவுக்கு பிரகாஷ் ராஜ் வாசிப்புத் தன்மை இல்லாதவர் அல்ல. தங்கள் படைப்பை அங்கீகரித்துக் கொடுக்கப்படும் விருதுகளை வழங்கிய அரசாங்கத்தின் அங்கீகாரமே ஆட்டம்கண்டு போகும்போதுதான் விருதுகள் திருப்பித் தரப்படுகின்றன. சரியான ஆட்சி இல்லை என்பதற்கான அடையாளமாகத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் பின்பற்றும் முறையை முட்டாள்தனம் எனச் சொல்வதற்கு ஒரு முரட்டுத்தனம் தேவையாக இருக்கிறதல்லவா?

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon