மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

சுஜா: போட்டியாளராக இனி பங்கேற்க மாட்டேன்!

சுஜா: போட்டியாளராக இனி பங்கேற்க மாட்டேன்!

குற்றம் 23, பென்சில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் நடனக் கலைஞருமான சுஜா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். “பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய சிறந்த முயற்சியை வழங்கியிருக்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையே போட்டியாளராக எனது முதலும் கடைசியுமான மேடை” என்று அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதிப்போட்டியில் ஆரவ் பரிசு கோப்பையும், 50 லட்சம் ரூபாய் பணத்தையும் வென்றார். பிக் பாஸ் நிறைவு நிகழ்வில் முன்னாள் போட்டியாளர்களின் நடனம் நடைபெற்றது. இதில் சுஜாவும் நடனமாடினார். ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சுஜா சென்றுவிட்டு மேடைக்கு வரும்போது நடக்க முடியாமல் மெதுவாக வந்தார். இதனால் அவர் வேண்டுமென்றே கமல் முன்னால் நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட தனது அனுபவம் குறித்தும் இந்த சர்ச்சை தொடர்பாகவும் சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நான் இவ்வளவு வருடங்களாக கண்ட கனவு நிஜமானதில் மகிழ்ச்சி. கமல் சார் என்னுடன் நடனமாடியதையும் அவர் என் மீது கொண்ட அக்கறையையும் மறக்கவே முடியாது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். என்னோடு பிக் பாஸ் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். நிச்சயம் அவர்கள் நன்றாக இருப்பார்கள். இந்த 2017ஆம் ஆண்டை எனக்கு மறக்க முடியாத ஆண்டாக ஆக்கிய அனைவருக்கும் என் நன்றி!

இதுவரை நான் காயப்பட்டிருந்தபோதும் பார்வையாளர்களை திருப்திப்படுத்தவே விரும்பியிருக்கிறேன். என்னுடைய சிறந்த முயற்சியை வழங்கியிருக்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையே போட்டியாளராக எனது முதலும் கடைசியுமான மேடை. இறுதி நாளுக்கு முந்தைய நாளில் எங்களது நடனத்தை ஒளிப்பதிவு செய்தார்கள். எனது கால்கள் மிகவும் மோசமடைந்தன. படத்தொகுப்பில் எல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தது போல் காண்பிக்கப்பட்டது. சிலவற்றை நான் தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கு அது தெரிய வேண்டும்..

இதுதான் எனக்கு சிறப்பான ஆண்டு. இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்க எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் எப்போதும் எனக்கு வேண்டும். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்” என்று சுஜா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் கருத்துகளை பகிர்ந்துகொள்வது மிகவும் எளிதாகவும் வேகமாகவும் மாறியுள்ளது. இது பல்வேறு விஷயங்களில் நேர்மறையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையை அறிந்துகொள்ளாமல் அவசரமாக கருத்து தெரிவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதும் நடக்கின்றன. சுஜாவின் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. அது ஏற்படுத்திய வலியே அவர் இந்தப் பதிவை எழுதக் காரணமாக இருந்துள்ளது. அவரை பற்றிய விமர்சனங்கள் வேகமாக பரவிய அளவுக்கு இந்த விளக்கம் பரவுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon