மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

தனிக்கட்சி தொடங்குவார் தினகரன்: அதிமுக எம்.எல்.ஏ!

தனிக்கட்சி தொடங்குவார்  தினகரன்: அதிமுக எம்.எல்.ஏ!

‘ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கி வருவதன்மூலம் தினகரன் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என நினைக்கிறேன்’ என்று குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததையடுத்து முதல்வர், அமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். ஆனால், தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்று அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து அதிரடியாக கருத்துகளைத் தெரிவித்துவரும் எடப்பாடி அணியைச் சேர்ந்த குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், செந்துறை அருகே சிறுகளத்தூரில் நேற்று (அக்டோபர் 2) நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் யாரும் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களை தினகரன் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தெரியவருகிறது. எனவே, அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்பு இவர்தான், ‘ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கலாம்’ என்றும், ‘ஜெயலலிதாவை மருத்துவமனையில் சசிகலா எடுத்ததாகக் கூறப்படும் வீடியோவில் உள்நோக்கம் உள்ளது’ எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon