மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

திருநங்கைகளுக்குத் தனிக் கழிவறை!

திருநங்கைகளுக்குத் தனிக் கழிவறை!

சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒதுக்கப்பட்டு வந்தாலும், நாட்டில் சில இடங்களில் அவர்களுக்கான உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபாலில் மூன்றாவது பாலினத்துக்காகத் தனிக் கழிவறை வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. மைசூருக்கு அடுத்தபடியாக மூன்றாம் பாலினத்துக்கான தனிக் கழிவறை அமைத்துக்கொடுப்பது போபால் நகரமாகும்.

இந்தாண்டு தொடக்கத்தில், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆண், பெண் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவது போல், மூன்றாம் பாலினத்துவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து அதை செயல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியப்பிரதேச அரசு இறங்கியது.

பொது இடங்களில் தனி கழிவறைகளைக் கட்டுவதற்கு 2014இல் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, போபால் மாநகராட்சியில் இரண்டாண்டுகளில் 20 லட்ச ரூபாய் செலவில் கழிவறை கட்டப்பட்டது.

‘பொது கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, மக்கள் எங்களைப் பார்க்கும்விதம் மோசமாக இருக்கும். இறுதியாக எங்களுக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை பெற்றதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என மூன்றாம் பாலின சமுதாயத்தின் உறுப்பினர் கரீனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “மாநிலத்தில் இதுபோன்று பல கழிவறைகள் கட்டப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவரின் குறைகளைப் போக்கும்வகையில் வாரியம் அமைக்கப்படும். இதன்மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். 1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அனைவருக்கும் வீடுகள் கட்டி தரப்படும். அனைத்து அரசு துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon