மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

முருகதாஸ் ரெடி: விஜய் ரெடியா?

முருகதாஸ் ரெடி: விஜய் ரெடியா?

‘மெர்சல்’ படத்துக்கான தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட விஜய், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு, கோவை சரளா என்று பலர் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளி அன்று வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் மெர்சலின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்ததை அடுத்து தன் குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக பார்சிலோனாவுக்குச் சென்றுள்ளார் விஜய். இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை விமான நிலையத்துக்குள் விஜய் நடந்து செல்லும் புகைப்படமும் அவருடைய விமான டிக்கெட்டின் புகைப்படமும் சில ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. சில நாள்கள் பார்சிலோனாவில் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் தீபாவளிக்கு முன்னர் சென்னை திரும்ப உள்ளதாகவும், அதன் பிறகு ‘மெர்சல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி முடிந்தவுடன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘விஜய் 62’ குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.முருகதாஸ், “துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் படத்தை இயக்க உள்ளேன். இந்தப் படம் துப்பாக்கி படத்தின் தொடர்ச்சி என்று பல வதந்திகள் பரவி வருகின்றன. அது தவறான செய்தி. முன்பு இயக்கிய துப்பாக்கி, கத்தி படங்களில் இருந்து இந்தப் படத்தின் திரைக்கதை முற்றிலும் மாறுபட்டிருக்கும். இந்தப் படத்துக்கான பிரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஜனவரி மதத்தில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும்” என்று கூறியுள்ளார். பிரமாண்டமாகத் தயாராகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய், 19 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon