மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 செப் 2017

வாட்ஸ்அப் வடிவேலு: உப்புமா தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

வாட்ஸ்அப் வடிவேலு: உப்புமா தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

“அந்த உப்புமாவ கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில கெடச்சான், அவ்ளோதான்” என பொங்கியெழும் கணவன்மார்கள் இன்னமும் இருக்கிறார்கள். “வாரத்துல 5 நாளும் உப்புமான்னா என்ன சார் பண்ணுறது. இதுல சாப்பிட்டு பார்த்து கமெண்ட் வேற சொல்லணுமாம், ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ்-லாம் வேற போடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது” எனச் சலித்துக்கொள்ளும் கணவன்மார்களே... இதோ வந்துவிட்டது உங்களுக்கான மாற்றுத்தேடல் ரவா இட்லி.

எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளைச் செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்குச் செய்து பள்ளிக்குக் கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையானவை:

ரவை - 1 கப்

தயிர் - 1 கப் (சற்று புளித்தது)

தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)

கொத்தமல்லி - சிறிது

சோடா மாவு - 1 சிட்டிகை

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, காய வைத்து, ரவையை போட்டு வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாறியதும், தயிர், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் சோடா மாவு சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அந்த ரவை கலவையோடு சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி பதத்துக்கு கரைத்து, ஒரு 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லிப் பாத்திரத்தில் அந்த மாவை இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான ரவை இட்லி ரெடி! இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இனி தினமும் உங்கள் வீட்டில் ரவை இட்லியே செய்யப்பட்டு தண்டனையாக வழங்கப்பட்டால் அதற்கு வடிவேலு பொறுப்பல்ல.

சில வருடங்களுக்குப்பிறகு உங்களின் தேடுதல்களில் ஒன்று இதுவாகவும் இருக்கலாம். ‘அந்த ரவா இட்லிய மட்டும் கண்டுபிடிச்சவன் என் கையில சிக்கினான்...’

தொடரும்...

- கிரேஸி கோபால்

வெள்ளி, 8 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon