மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 செப் 2017

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4 - உதய் பாடகலிங்கம்

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4 - உதய் பாடகலிங்கம்

துப்பாக்கி முனையில் தேர்வு?

ஆன்மிகப் பீடங்களுக்கும் அதிகார மையங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை காண முடிந்தால், கடவுளின் தூதுவன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களை நம்மால் விலக்க முடியும். ஆனால், யதார்த்தம் வேறாக இருக்கிறது. ஓரிடத்தில் மக்கள் கும்பலாக நிற்பதைக் கண்டால், நடுவில் இருப்பவர் யார் என்றுதான் கண்கள் தேடுகின்றன. கூட்டத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, இதுவே சாதகமாக இருக்கிறது.

குர்மீத் ராம் ரஹீமைப் பொறுத்தவரை, தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் உத்திகள் எப்போதும் அவர் கைவசம் உண்டு. தேரா சச்சா சவுதாவின் தலைமையகத்தை அவர் சுற்றிவந்த நாள்களிலிருந்து இது தொடங்குகிறது.

மஹார் சிங்கின் கரம் பற்றி சச்சா சவுதாவுக்குள் நுழைந்த குர்மீத், அதன் பிறகு அங்குள்ள வேலைகளோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். ஆனால், 17 வயதில் ஹர்ஜித் கவுருடன் அவருக்குத் திருமணம் நடக்கிறது. இந்தத் தம்பதியருக்கு சரண் ப்ரீத், அமர் ப்ரீத் என்று இரண்டு மகள்கள், ஜஸ்மீத் என்றொரு மகன்.

குர்மீத்தின் பழைய புகைப்படம் ஒன்று, அவர் எப்படிப்பட்ட இல்வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதைப் புரியவைக்கிறது. கேமராவைப் பார்க்காமல் ஹர்ஜித் ஓரமாக நிற்க, ஜீன்ஸும் டி ஷர்டும் அணிந்து ஸ்டைலாகத் தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் குர்மீத். இதனைப் பார்க்கும் எவரும், அடுத்த சில ஆண்டுகளிலேயே இவர் சன்னியாசி ஆகிவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அதுதான் நிகழ்ந்திருக்கிறது.

1960ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் தலைவராகப் பொறுப்பேற்ற ஷா சத்னாம் சிங் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தான் ஓய்வுபெறப் போவதை அறிவித்தார். அதற்குச் சில மாதங்கள் முன்பாகவே, அடுத்த தலைவரைப் பற்றிய பேச்சுகள் சிர்ஸாவில் தொடங்கியிருந்தன. ‘அடுத்த தலைவர் இவர்தான்’ என்று தேராவிலிருந்த ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்திருந்தனர்.

திகைப்பூட்டிய தேர்வு

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகத் தலைமைப்பொறுப்பில் இருந்த சத்னாம் சிங்கும் தனக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்று முடிவெடுக்கக் கட்டாயம் அதிக காலத்தைச் செலவிட்டிருப்பார். தேராவுக்காகத் தொடர்ந்து உழைப்பவர் யார், பிரதிபலன் எதிர்பாராமல் இருப்பவர் எவர் என்று அடையாளம் கண்டிருப்பார். முக்கியமாக, தலைமையை ஏற்கும் பக்குவத்துடன் அந்த நபர் இருக்கிறாரா என்று மதிப்பீடு செய்திருப்பார். அந்த வகையில், சத்னாம் சிங்குக்கு அடுத்த நிலையில் இருந்த மூன்று பேரில் ஒருவர் தேராவின் தலைவராவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

மாறாக, ஹுசுர் மஹராஜ் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்று இருபத்தி மூன்று வயதான ஒரு வாலிபரை அறிவித்தார் சத்னாம் சிங். குர்மீத் சிங் புதிய நபரல்ல என்றபோதும், அங்கிருந்த அனைவரும் திகைத்துத்தான் போயிருக்க வேண்டும். அப்போது, இதன் பின்னணியில் குர்ஜந்த் சிங் என்பவர் இருந்ததாகச் சில கிசுகிசுப்புகள் எழுந்தன.

யார் இந்த குர்ஜந்த் சிங் என்றறிவதற்கு முன்பு, 90களில் வலுவாகத் திகழ்ந்த காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் பற்றித் தெரிய வேண்டும்.

1984ஆம் ஆண்டு அமிர்தசரஸ் தங்கக் கோயிலில் நடந்த ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு, ‘சீக்கியர்களுக்கான தேசம் காலிஸ்தான்’ என்ற நோக்குடன் பல குழுக்கள் பஞ்சாப், ஹரியானாவில் தொடங்கப்பட்டன. காவல்துறை, ராணுவம், உளவுத்துறையைத் தாண்டித் தங்களுக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்க முனைந்தன இந்தக் குழுக்கள். அவற்றில் ஒன்று 1986ஆம் ஆண்டு மன்பீர் சிங் சஹேருவால் தொடங்கப்பட்ட காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் (Khalistan Commando Force). அதன் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்தான் இந்த குர்ஜந்த் சிங் ராஜஸ்தானி.

கங்கா நாகர் மாவட்டத்திலுள்ள ராய் சிங் நாகர் என்ற ஊரில் பிறந்த இவர், குர்மீத் சிங்கின் பால்ய கால நண்பர் என்றும், நெருக்கமான உறவினர் என்றும் இரு விதமான தகவல்கள் சொல்லப்படுகின்றன. இவரது சித்தப்பா ஜோகிந்தர் சிங்கை ஒருவன் கொன்றுவிட, 15 வயதிலேயே அவரைப் பழி வாங்கினார் குர்ஜந்த். சிறைவாசத்தின்போது காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களின் தொடர்பு உண்டாக, அப்படியே இவரது போக்கு திசை மாறியிருக்கிறது.

குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்தபோதும், குர்ஜந்தின் போக்கு மாறவில்லை. 1990களில் காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் தலைவர் கொல்லப்பட, அந்த இயக்கம் பலவாறாகப் பிரிந்தது. அவற்றில் ஒரு பிரிவுக்குத் தலைமை ஏற்றார் குர்ஜந்த் சிங். தனது குழுவை வலுப்படுத்தத் தேவையான பொருளாதார வசதிகளைப் பெறுவதற்காக, குர்மீத் சிங், தேரா சச்சா சவுதாவின் தலைவராவதை இவர் ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையேயான நட்பு துணைக்குவர, சிர்ஸா தலைமையகத்தினுள் நுழைந்தார் குர்ஜந்த் சிங். துப்பாக்கி முனையில் ஷா சத்னாம் சிங்கை இவர் மிரட்டியதாலேயே, குர்மீத் சிங் தலைவராக அறிவிக்கப்பட்டார் என்று சொல்பவர்கள் உண்டு. இந்தச் சம்பவம் நிகழ்ந்து சுமார் ஓராண்டு கழித்து, ஆகஸ்ட் 31, 1991ஆம் தேதியன்று போலீஸாருடன் நடந்த சண்டையில் குர்ஜந்த் சிங் கொல்லப்பட்டார். அது ஒரு போலி என்கவுன்ட்டர் என்று இப்போதும் சில சீக்கியக் குழுக்கள் இணையத்தில் விவாதம் செய்கின்றன. நேரடியாக யாரும் குற்றம்சாட்டவில்லை என்றாலும், குர்மீத்துக்கு குர்ஜந்த் உதவி செய்த தகவல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

குர்மீத் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு, தேராவில் இருந்த எளிமை காணாமல் போனது. எங்கும் எதிலும் பகட்டும் ஆடம்பரமும் ஒட்டிக்கொண்டன. வழக்கத்துக்கு மாறாக, தேரா சச்சா சவுதா தலைமையகத்தினுள்ளேயே, குர்மீத்தின் குடும்பம் வசிக்கத் தொடங்கியது. அது பற்றிய கேள்விகள் எழாததால், பெண் சீடர்களுடன் ஆசிரமத்தினுள் குர்மீத் வலம் வந்தது பற்றியும் யாரும் வாய் திறக்கவில்லை.

நாளை...

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

புதன், 6 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon