மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 செப் 2017

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் வடிவேலு!

இந்தப் பெண் குழந்தை பாட்னா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவசர ரத்தம் தேவை – (எந்த ஊரு, பேரு, அட்ரஸ், நாள் எதுவும் இருக்காது)

சக்தி வாய்ந்த கதிர்கள் இன்று பூமிக்கு வருகிறது.

பஞ்சாப்பில் செல்போன் வெடித்து முகம் சிதறிய சிறுவன்.

மஹாராஷ்டிராவில் ரயில் ட்ராக்கை க்ராஸ் செய்ய முயன்றபோது தலை துண்டான மனிதன்.

இந்தப் பூச்சியை தொட்டால் கை ஓட்டையாக மாறிவிடும்.

தேங்காயில் ஏதேனும் முகம் தெரிந்தால் ஷேர் செய்யவும்.

விருத்தாச்சலத்தில் தொலைந்த பத்தாம் வகுப்பு மாணவியின் சர்டிஃபிகேட் (இன்னேரம் அதோட புள்ள பத்தாவது படிச்சிட்டு இருக்கும்).

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் வண்ணமயமான வாட்ஸ்அப்பை பெறலாம் (அதுக்கு ஒரு பாம்ப பெருசா நெளிய விட்டுருப்பாங்க).

இதை பத்து பேருக்கு ஷேர் செய்துவிட்டு பேலன்ஸ் செக் செய்யுங்கள்.

இந்தப் படத்தை நன்றாக உத்துபாருங்கள். உருவம் தெரிந்தால் ஷேர் செய்யுங்கள்.

100 ரூபாய்க்கு லேப்டாப், 10 ரூபாய்க்கு பென்ட்ரைவ் பெற உடனே இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

விவசாயிகளைக் காக்க உடனே ஷேர் செய்யுங்கள்.

எல்லாத்தையும் சொல்லிவிட்டு கடைசியா ஒருவரி கீழே இருக்கும் பாருங்க.

குறிப்பு: ‘இந்த Messageஐ நீங்கள் கவனக்குறைவாக நினைத்துவிடாதீர்கள்’ என்று. நல்லா வருவீங்கடா நீங்கள்லாம்.

நம் நாட்டில் பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம், இது போன்ற வாட்ஸ்அப் வதந்திகள்தான். அதிலும், ‘வெட்கம்... மானம்... சூடு... சொரனை உள்ள தமிழன்னா மறக்காம சர்ப்ரைஸ் பண்ணவும்’னு ஒருத்தன் அனுப்பிருக்கான். (அடேய் அது சர்ப்ரைஸ் இல்ல.. சப்ஸ்க்ரைப்)

இன்னும் சிலரின் பொலம்பல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

உன் உடம்பில் ஓடுவது நல்ல தமிழ் ரத்தம் என்றால் ஷேர் செய்யவும்.

எத டா?

எதையாவது ஷேர் பண்ணுடா

நேத்து ஒரு விஷயத்தை நம்மாழ்வார் சொன்னதா அனுப்பினானுங்க.. இன்னிக்கி நாசர் சொன்னதா அனுப்புறானுங்க.

முன்னாடியெல்லாம் தமிழனா/இந்தியனா இருந்தா ஷேர் செய்யவும்னு போடுவானுங்க. இப்ப புதுசா மனிதனா இருந்தா ஷேர் செய்யவும்னு போடுறானுங்க. மாடுமா வாட்ஸ்அப் யூஸ் பண்ணுது?

ஸ்ஸ்ஸப்பா... முடியல...

நீ ஒரு தமிழனா இருந்தா உன் கேர்ள் ஃப்ரெண்டு நம்பரை ஷேர்

பண்ணு.

என்னடா இப்படி இறங்கிட்டீங்க?

#வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்... இருந்தா தரமாட்டேனா...

நாட்டுல எவனும் திருந்தவே மாட்டானுங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாது. ஏன்னா, நம்ம வீட்லயும் அல்லது குடும்ப குரூப்லயோ, ஆபீஷியல் குரூப்பிலயோ அந்த மெசேஜ நம்மாளு ஒருத்தன் இப்பதான் அனுப்பிருப்பான்.

‘நல்லது நடக்கலன்னாகூட பரவால்ல ஆனா கெட்டது நடந்துடுச்சின்னா... எதுக்கு வம்புன்னு நாமளும் பத்து பேருக்கு அந்த சாமி படத்தை அனுப்பி வைப்போம்’என ஃபார்வேர்டு செய்பவர்களும் உண்டு.

20 வருடங்களுக்கு முன்பு கிராமப்புறங்களில் பஸ்ஸில் ஒரு ஆளு நம்ம மடியில ஒரு துண்டுச் சீட்டை போட்டுட்டு போவாரு... ‘இதை பத்து பேருக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுங்கள். இல்லையேல் கெட்டது நடக்கும்’ என செய்ததின் டிஜிட்டல் வெர்ஷன்தான் இது. 30 வருடங்களுக்கு முன்பு நம் பெற்றோர்கள், 21 முறை கையால் பேப்பரில் எழுதி, கண்டவர்களின் கையில் திணித்துவிட்டு ஓடிய கதையெல்லாம் சொல்வார்கள். கேட்டுப்பாருங்கள்.

சமீபத்தில் உச்சபட்ச வாட்ஸ்அப் அலப்பறை ஒன்று பரவியது. ‘இதுதான் வள்ளுவர் மனைவி வாசுகி. அரிய புகைப்படம். உடனே ஷேர் செய்து தமிழர்களின் மானம் காப்போம் வாருங்கள்’ என்று ஒரு மெசேஜ். அடேய்... வள்ளுவர் காலத்துல எங்கடா கேமரா கண்டுபுடிச்சாங்க. வள்ளுவரை ஒரு கற்பனை ஓவியம்தானடா என எடுத்துக்கூறினால் அதுக்கு ஒரு ஸ்மைலிதான் ரிப்ளேவாக வருகிறது.

இன்னும் பழங்கால நாணயம், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் அரிதான புகைப்படங்கள்லாம் வேணும்னா நம்ம ஆளுங்கக்கிட்ட கேளுங்க. தருவாங்க. அவங்க பரம்பரைதான் ராஜராஜசோழனின் ஆஸ்தான போட்டோகிராபர்.

ஏதேனும் லிங்க் அல்லது பேங்க் டீட்டெய்ல் கேட்பது போன்றவற்றால் நம் ரகசியங்கள் திருடப்படும் அல்லது வைரஸ்கள் பரப்பப்படும் என்பது போன்ற விழிப்புணர்வுகளைச் சொன்னால், அதையே டைப் செய்து, கீழே ‘உடனே ஷேர் செய்யவும்’என அனுப்பி விடுகிறார்கள். (முடியலடா டேய்ய்...)

யாம் பெற்ற இன்பம் பெறுக இம்மின்னம்பலம் எனும் அரிய நோக்கத்தோடு இனி உங்களோடு சில பல நல்ல வாட்ஸ்அப் மெசேஜ்களை ஷேர் செய்ய வருகிறார் வாட்ஸ்அப் வடிவேலு.

தொடரும்...

- கிரேஸி கோபால்

புதன், 6 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon