மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 செப் 2017

அனிதா... பரிதாபச் சின்னமல்ல, போராட்டச் சின்னம்!

அனிதா... பரிதாபச் சின்னமல்ல, போராட்டச் சின்னம்!

டெல்லி தேசிய இனங்களின் சாம்பல் மேடு என்றார் பேரறிஞர் அண்ணா. அது வெறும் வார்த்தைகள் அல்ல! ஆண்டாண்டுகளாய் நிலைத்திருக்கும் நெருப்பாய் இன்றும் சுட்டுக் கொண்டிருக்கிறது, அரியலூர் வந்து அனிதா என்னும் ஓர் இளம் தளிர் வரைக்கும்!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த மாணவி அனிதா, தான் படித்த மாநிலப் பாடத் திட்டத்தில் மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்காததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை இந்தக் கொடூரம் நடந்த சில நிமிடங்களில் பரவிய இந்தத் தகவல், தமிழகம் தாண்டி இந்தியா முழுமையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி சந்தையில் மூட்டைத் தூக்கும் தொழிலாளி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இந்த குடும்பதின் செல்லக் குழந்தையான அனிதா பள்ளியில் எப்போதும் நன்றாக படிப்பவர். மருத்துவராக வேண்டும் என்பது அனிதாவின் விருப்பமாக இருந்துள்ளது.

நீட் என்பது தன் கல்விக்கு மட்டுமல்ல, தனக்கே எமனாக வரும் என்பதை எல்லாம் அறியாமல் கருத்தூன்றி படித்து பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அனிதா. மருத்துவப் படிப்புத் தேவையான பாடங்களில் இருந்து 196.75 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால்... நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார் அனிதா.

இதனால் அவரது மருத்துவ கனவு தடைப்பட்டது. தமிழகம் முழுக்க நீட் தேர்வை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராட்டங்கள் நடந்த நிலையில்... தன்னுடைய நலம் விரும்பிகள் தந்த ஊக்கத்தால்... நீதி கேட்டு டெல்லிக்கே செல்லத் துணிந்தார் அனிதா.

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று நளினி சிதம்பரம் என்ற புகழ் பெற்ற வழக்கறிஞரை வைத்து சிபிஎஸ்இ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று அனிதா மனு தாக்கல் செய்தார்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும். மருத்துவராகும் கனவு பறிபோய்விடும் எனவே தனக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் அளிக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார். .ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து தமிழக அரசும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வை நடத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே, மருத்துவ கலந்தாய்வில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார் அனிதா. நீட் இல்லை என்றால் இந்நேரம் மருத்துவ மாணவியாக, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த தன் சமுதாயத்தில் இருந்து ஒரு மருத்துவராய் நிமிர்ந்து நடந்திருப்பார் அனிதா. தன் கூரை வீட்டுப் பின்னணியில் இருந்து, தான் மருத்துவர் ஆனதற்கு யார் யார் காரணம் என்றெல்லாம்... தன் கிராமிய மொழியில் சேனல்களில் நன்றி சொல்லி பேட்டி கொடுத்திருப்பார்.

ஆனால், 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு புத்திசாலி மாணவியான அனிதாவின் உடலைச் சுற்றி ஒப்பாரிக் குரலைதான் இன்று சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பாரிக் குரலுக்கு மத்தியில் நீட் சிரித்துக் கொண்டிருக்கிறது!

பிச்சை புகினும் கற்கை என்றாள் ஔவை பாட்டி. தான் தற்கொலை செய்யினும் தன்னைப் பின் தொடரும் மாணவர்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என்று தன் உயிரையே கொடுத்துவிட்டார் அனிதா.

அனிதாவின் தற்கொலை இந்த பிரச்னைக்கு தீர்வல்ல. அதேநேரம் தமிழ்நாட்டு கிராமப்புற மாணவர்கள் கல்விக்காக உயிரையே கொடுப்பார்கள் என்ற ஒரு செய்தியை தமிழகம் இந்தியாவுக்குக் கொடுத்திருக்கிறது. அனிதா பரிதாபத்தின் சின்னமாக அல்ல, போராட்டத்தின் சின்னமாகவே பார்க்கப்படுகிறார்.

அரியலூரின் ஒப்பாரி உச்சநீதிமன்றத்தில் ஒலிக்குமா?

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 செப் 2017