மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 ஆக 2017

சாதனை படைத்த மாணவன்!

சாதனை படைத்த மாணவன்!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். போன்ற பொறியியல் படிப்பில் சேருவதற்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ. நடத்தும், ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (ஜே.இ.இ) பிரதான நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

2017ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை ஏப்ரல் 2ஆம் தேதி நாடு முழுவதிலும் இருந்து 11.8 லட்சம் பேர் எழுதினர். அதற்காக 1,781 மையங்கள் அமைக்கப்பட்டன. ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கான முடிவு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் உதய்பூரை சேர்ந்த கல்பிட் வீர்வால் 360 மதிப்பெண்ணுக்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். வாசு ஜெயின் மற்றும் அனன்யா அகர்வால் 360 மதிப்பெண்ணுக்கு 350 மதிப்பெண் பெற்றனர்.

இந்த நிலையில், 100% மதிப்பெண் எடுத்த கல்பிட் வீர்வால் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 2018ஆம் ஆண்டு வெளியாக உள்ள லிம்கா புத்தகத்தின் கல்வித்துறை சாதனைப் பிரிவில் இவர் பெயர் இடம்பெறும். ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் 100% மதிப்பெண் எடுப்பது இதுவே முதன்முறை என்பதால் லிம்கா சாதனையில் அவர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மஹாராணா பூபால் அரசு மருத்துவமனையில் கல்பிட் வீர்வால் தந்தை புஷ்பேந்திரா வீர்வால் செவிலியராகவுள்ளார். தாய் புஷ்பா அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். அவரது மூத்த சகோதரர் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கிறார். கல்பிட் வீர்வால் தற்போது மும்பை ஐ.ஐ.டி-யில் கணினி அறிவியல் பயின்று வருகிறார்.

இதுகுறித்து கல்பிட் வீர்வால், “நான் தினமும் 15 மணி நேரம் எல்லாம் படிக்கவில்லை. ஆனால், ஒரே சீராக படித்துவந்தேன். அது எனக்குப் பெரிதும் உதவியது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்பிட் வீர்வாலின் பெற்றோர், “என் மகனை கோட்டா அல்லது ஹைதராபாத் பயிற்சிக்கு அனுப்புமாறு அனைவரும் பரிந்துரை செய்தனர். ஆனால், அவருக்கு நாங்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்குள்ள நிறுவனத்திலேயே பயிற்சிக்கு அனுப்பினோம். ஆனால், நாங்கள் எதிர்பாராத மதிப்பெண்ணை அவர் பெற்றுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

கல்பிட் வீர்வால் 9ஆம் வகுப்பு படிக்கும்போது இந்திய ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட்டில் முதலிடத்தையும், 10ஆம் வகுப்பு படிக்கும்போது தேசிய திறனாய்வுத் தேர்வில் முதலிடத்தையும் பிடித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

திங்கள், 21 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon