மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

காசியில் எதிரொலித்த ராமானுஜர்!

 காசியில் எதிரொலித்த ராமானுஜர்!

ராமானுஜருக்கு எம்பெருமானார் என்ற பெயர் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெயரை சுருக்கி எம்பார் என்று தன் தம்பிக்கு வைத்ததையும் பார்த்தோம். எம்பாருக்கு, ராமானுஜரின் நிழல் என்றும் ஒரு பெயர் உண்டு. எப்போதும் அவர் ராமானுஜருடன் தான் இருப்பார்.

ராமானுஜர் காலையில் கண் விழிப்பது முதல் இரவு துயில் கொள்வது வரை அவரது பக்கத்தில்தான் இருப்பார். ராமானுஜர் துயில் கொண்ட பின்பும் பக்கத்திலேயேதான் இருப்பார். இதனால்தான் எம்பாருக்கு ராமானுஜ பதாச்சாய அதாவது ராமானுஜரின் நிழல் என்ற உருவகம் வந்தது.

எம்பார் பற்றி இன்னும் சிலவற்றை சிறிது இடைவெளிவிட்டுப் பார்ப்போம்.

இப்போது 'இன்னொரு' எம்பெருமானாரை அறிமுகப்படுத்தப்போவதாக சொல்லியிருந்தோம் அல்லவா...

அந்த 'இன்னொரு' எம்பெருமானாரை பார்ப்போம்.

ராமானுஜர்தான் எம்பெருமானார். அவரே இஷ்டப்பட்டு தன் பெயரை சுருக்கி எம்பார் என்று தன் தம்பிக்கு வைத்திருக்கிறார். இதில் இன்னொரு எம்பெருமானார் ஏது?

"இந்த பூமிக்கு ஒரே ஒரு சூரியன் தான், ஒரே ஒரு சந்திரன் தான்.அதேபோல எம்பெருமானாரும் ஒரே ஒருவர்தான்'' என்று எம்பார் சொன்னாரே... பிறகு எப்படி இன்னொரு எம்பெருமானார் வருவார்?

இந்தக் கேள்விக்குப் பதிலை தேட... நாம் சற்றே ஆந்திரா போய் அப்படியே காசி போய் மீண்டும் திரும்பி ஸ்ரீரங்கம் வரவேண்டும்.

இன்றைய ஆந்திராவிலுள்ள நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறுநகரம் விஞ்சிமூர். இப்போது இது நகரம். ராமானுஜர் காலத்தில் இது சின்னஞ்சிறு ஊர். இந்த ஊரில் யக்ஞ மூர்த்தி என்பவர் அத்வைத குடும்பத்தில் பிறந்தவர். பாடசாலைகளில் தரமான கல்வி கற்றதால், ஆசாரியர்கள் பலரும் இவரோடு அறிவுரையாடல் நடத்தியதால் அந்த பகுதியில் புகழ் பெற்றார்.

நமது பாரதப் பண்பாட்டின் மிக முக்கியமான ஓர் அறிவுக் கூறு என்னவென்றால், 'தர்க்க சாஸ்திரம்' அதாவது வாதில் வெல்லுதல்.

போரில் வெல்லுதல் வேந்தருக்கு அழகு என்றால் வாதில் வெல்லுதல் பண்டிதர்க்கு அழகு. ஒவ்வொரு சமய பண்டிதர்களும் தங்களது கருத்துகளை வாதமாக வைத்து அதற்கான ஆதாரங்களை பண்டைய நூல்களில் இருந்து எடுத்தாண்டு, எதிர்தரப்பாரை பதில் சொல்ல முடியாமல் திணறடித்து வெற்றி பெறுவார்கள். இதுவே தர்க்க சாஸ்திரம்.

சமீபத்தில் நமதுபிரதமர் மோடி கூட, 'நாட்டில் பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும். பேசித் தீர்ப்பதுதான் பாரதப் பண்பாடு. இதை தர்க்கசாஸ்திரம் என்று நம் முன்னோர்கள் அழைத்தனர்' என்று பெருமிதப்பட்டுள்ளார்.

அந்த வகையில் யக்ஞ மூர்த்தியும் மிகப்பெரிய பண்டிதர். தான் அத்வைதி என்பதால் அது சார்ந்த கருத்துகளை பல கோயில்களில்-மண்டபங்களில் வைத்து விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எடுத்து வைப்பார்.எதிரிகளை வென்று வைப்பார்.

அந்த கால கட்டங்களில் இதுபோன்ற தர்க்க வாதிகளுக்கு அவர்களின் கொள்கை சார்ந்த அரசர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். அறிவை மதிப்பார்கள். அந்த வகையில் யக்ஞ மூர்த்தி அத்வைதத்தை நிலைநாட்டும் வகையாக கங்கைக் கரை சென்றார். காசி நகரத்திலே உள்ள பல வேத பண்டிதர்களுடன் வாதம் புரிந்து அவர்களை வென்றார்.

மாயாவாதத்தில் இனி ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக யக்ஞ மூர்த்திதான் என்று கங்கை கரை பண்டிதர்கள் எல்லாம் பாராட்டித் தள்ளினார்கள். இதனால் யக்ஞ மூர்த்தியை நோக்கி சிஷ்யர்கள் பலர் திரண்டு வந்தார்கள். மாயாவாத சந்யாசி வருகிறார் என்று அறிவித்து காசியிலும் மற்ற பல இடங்களிலும் தர்க்க மண்டபங்கள் நிறைந்தன.

தனது ஒவ்வொரு அமர்விலும் யக்ஞமூர்த்தி எதிர்வாதம் புரிபவர்களைத் தோற்கடித்து அத்வைதத்தின் புகழைப் பரப்பினார்.

காசியின் புகழ்பெற்ற முக்கியமான வேத பண்டிதர்களை எல்லாம் வாதத்தில் வென்ற யக்ஞ மூர்த்தி, புகழ் போதையில் மிதந்தார்.

இனி காசியில் இவர் வெல்ல இனி பண்டிதர்களே இல்லையோ என்ற நிலைக்கு சென்றது யக்ஞ மூர்த்தியின் புகழ்.

ஒரு மேடையில் இருந்து ஜெயித்துவிட்டு இறங்கும்போது... ஒரு சிறு மாணவன் காசியில் யக்ஞ மூர்த்தியைப் பார்த்து கேட்டான்.

"இங்கே எல்லாரையும் தோற்கடிக்கிறீர்களே... தெற்கே ராமானுஜர் என்றொரு மகா பண்டிதர் இருக்கிறார். அவரைத் தெரியுமா? விசிஷ்டாத் வைதத்தின் வேந்தராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரை உம்மால் வாதில் வெல்ல முடியுமா?"

-அந்த சிறுவனின் கேள்வி யக்ஞ மூர்த்தியை கடுமையாக தாக்கியது. ஏனெனில் யக்ஞ மூர்த்திக்கும் ராமானுஜரை நன்கு தெரியும்.

காசி வரை பரவியிருந்த ராமானுஜரின் புகழை அவரும் கேள்விப்பட்டு, " ராமானுஜருடன் வாதம் செய்வேன்'' என்று பதிலளித்துவிட்டுப் புறப்பட்டார்.

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் ஜெகத்ரட்சகன் அவர்கள் தனது இனிமையான வாதங்களால் ராமானுஜரை பரப்பிக் கொண்டிருப்பவர். ஆழ்வார்களின் பாசுரங்களை ஜெகத்ரட்சகன் பாடினால் தமிழ் அருவி தழைத்துக் கொட்டும்.

சரி… யக்ஞ மூர்த்தி ராமானுஜருடன் வாதம் செய்தாரா?

விளம்பர பகுதி

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon