மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

நீட் மேல் முறையீடு தள்ளுபடி!

நீட் மேல் முறையீடு தள்ளுபடி!

நீட் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மே 7ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்தது. இதனால், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மேல் முறையீடு மனு இன்று (ஆகஸ்ட் 11) அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்தது மதியமே நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,’ நாடு முழுவதும் மாணவர்களிடம் சமநிலை முறை வேண்டும் என்பதற்காகத்தான் “நீட்” தேர்வு முறை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்திருந்தனர். மேலும், “மாணவர்கள் நலன் கருதி 85 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பைச் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை வரவேற்கிறோம். அந்த ரத்து செல்லும். எனவே தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்“ என்றும் அறிவித்தனர்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon