மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

அழகன்குளம் அகழ்வாய்வு : தமிழர்களின் சிறப்பு!

அழகன்குளம் அகழ்வாய்வு : தமிழர்களின் சிறப்பு!

தமிழகம் பண்டைய காலத்தில் கட்டட மற்றும் ஓவிய கலையில் சிறந்த விளங்கியது என்பதை அகழ்வாய்வு எடுத்துரைத்து வருகின்ற நேரத்தில், தமிழகம் வணிகத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமம் சங்ககாலத்தில் புகழ் பெற்ற வணிக நகரமாக திகழ்ந்துள்ளது என அழகன்குளம் அகழ்வாய்வு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து மண்ணில் புதைந்துள்ள வரலாறுகளை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தி வருகிறது. இதன்மூலம் பண்டைய கால மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வணிகம், எழுத்தறிவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அதுபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் கிராமம் சங்ககாலத்தில் புகழ் பெற்ற வணிக நகரமாகத் திகழ்ந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, 1986-87 ஆம் ஆண்டில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் 1990-91, 1993-94, 1995-96, 1996-97, 1997-98 மற்றும் 2014-15 ஆகிய வருடங்களில் 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், பண்டைய கால மக்கள் பயன்படுத்திய ஆபரண பொருட்களான சங்கு, சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் மற்ற நாடுகளுடன் கொண்ட வணிகம் ஆகியவற்றிற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. தமிழர்கள் வணிகத்திற்காகப் பயன்படுத்திய நாணயங்கள், கிராமி எழுத்து பொரித்த மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அழகன்குளம் மைய இயக்குநர் பாஸ்கரன் கூறுகையில், இந்த அகழ்வாய்வு மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. இது கீழடியை மிஞ்சியுள்ளது. சுடுமண் சிற்பம், சங்குகள், யானைத் தந்தங்களால் ஆன அணிகலன்கள், இரும்பிலான பொருட்கள், மண்பாண்டங்கள் போன்ற அரியப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணி முடிவடைந்த பின்னர், பழந்தமிழர்களின் பொருட்கள் சிலவற்றை காட்சிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon