மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்!

முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நடப்பாண்டில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. அதையடுத்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அறிமுகம் செய்வதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் கூடியது. அதன் பிறகு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடராக கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் இன்று ஆகஸ்டு 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

மழைக்கால கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று மக்களவையில், கேள்வி நேரத்தின்போது, எல்லைப்பகுதியில் சீன தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு போர் மிரட்டலும் விடுப்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கேள்வியெழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதில் கூறுகையில், எந்த நிலையையும் எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றும், அணு ஆயுதங்கள் கொள்முதல் குறித்து பொதுக்கணக்கு குழு மற்றும் பாதுகாப்பு துறையின் ஆலோசனையின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், வங்கிகளில் பெற்ற கடன்களில் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக ரீதியான முடிவாகும். கார்ப்பரேட்களின் கடன்களில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இது பற்றி கருத்து தெரிவிக்கும் முன்னர் தரவுகளைச் சரிபார்க்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் எதுவும் இல்லை என்றும் விவசாயம் மற்றும் கிராமப்புறத் வளர்ச்சிகளுக்காக இந்த நிதியாண்டில் அரசு ரூ.2.92 லட்சம் கோடி தொகையை முதலீடு செய்திட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை மறுதேதி குறிப்பிடப்படாமல் சபாநாயகர் சுமத்திரா மகாஜென் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதும், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவையை, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தலைமை வகித்து நடத்தினார். அப்போது, துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள வெங்கையா நாயுடுவைப் பாராட்டி பிரதமர் மோடி கூறியதாவது, துணை ஜனாதிபதி சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர். அவர் சாதாரண விவசாயி மகன். ஏழைகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தியவர். மாநிலங்களவையின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்.

நீண்ட கால அரசியல் பயணத்திற்குப் பிறகு இப்பதவிக்கு வந்திருக்கும் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் இருக்கிறார். வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும். ஏழை விவசாயியின் மகன் மிக உயர்ந்த பொறுப்புக்கு வந்திருப்பது, இந்தியாவில் இருக்கும் முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்துக்கான சான்றாகும். விவசாயத்தைக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடுக்கு விவசாயத்தில் உள்ள சவால்கள் நன்கு தெரியும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

அதையடுத்து, மாநிலங்களவைக்கு வருகை புரிந்து தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon