மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

ஏழாம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

 ஏழாம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

ப்ளூ வேல் எனப்படும் ஆன்லைன் கேம் மூலம் தற்கொலைக்கு முயன்ற மாணவனை உடற்கல்வி ஆசிரியர் காப்பாற்றியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சாமலி தேவி பப்ளிக் பள்ளியில் பயின்று வந்த 7ஆம் வகுப்பு மாணவன், தனது தந்தையின் செல்பேசியில் ’ப்ளூ வேல்’(Blue Whale) எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடியுள்ளார்.

இந்த விளையாட்டில் 50-வது நாள் சவாலாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இதனால் அந்த மாணாவர் நேற்று காலை (ஆகஸ்ட்,10) பள்ளியின் 3வது மாடியில் இருந்து, குதிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவனைக் கண்டு, தடுத்து நிறுத்தி, வகுப்பறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ப்ளூ வேல் கேம் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி, மும்பையைச் சேர்ந்த 14வயது சிறுவன் ப்ளூ வேல் விளையாட்டால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். ப்ளூ வேல் விளையாட்டால் இந்தியாவில் நிகழ்ந்த முதல் தற்கொலை இதுவே. அதைத் தொடர்ந்து இந்தச் சிறுவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

ரஷ்யாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தனது நண்பருடன் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் ப்ளூ வேல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இப்படி ஒரு விளையாட்டு இருப்பது வெளியே தெரிய வந்துள்ளது.

ப்ளூ வேல் கேம் :

ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், 50 நாட்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால்கள் பங்கேற்பாளர்களுக்குக் கொடுக்கப்படும். அதைப் பங்கேற்பாளர்கள் மறுக்காமல் செய்து முடிக்க வேண்டும். தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் பேய் படங்களை பார்ப்பது, காலை 4 மணிக்கு எழுவது என எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போகச் சவால்கள் கடினமாக்கப்படும். அதாவது வீட்டின் மேற்கூரை மேல் நடக்க வேண்டும், கையில் ப்ளூ வேலை கத்தியால் வரைய வேண்டும், யாருடனும் பேசாமல் இருக்க வேண்டும் போன்றவை சவாலாக அளிக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு சவாலையும் முடித்து விட்டதாக செல்ஃபி எடுத்துப் போட வேண்டும். இறுதியில் அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என சவால் விடப்படும். இந்த விளையாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற முடியாது. வெளியேறினால், அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என மிரட்டப்படுவார்கள். எளிதான சவால்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், ப்ளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்து, மாய உலகத்துக்குள் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இந்த விளையாட்டின் நோக்கம். ப்ளூவேல் விளையாட்டின் தாக்கம் அர்ஜெண்டினா, பிரேசில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், சிலி, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் தோன்றிய இந்த ப்ளூ வேல் கேம் அந்நாட்டில் சுமார் 130 பேரை பலி கொண்டுள்ளது.

இந்த விளையாட்டை உருவாக்கிய பிலிப் என்பவரை ரஷ்ய போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அப்போது, ‘நான் தற்கொலைக்கு தூண்டியது உண்மை தான். அவர்கள் இறந்தது மகிழ்ச்சி. அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் கிடைக்காத சந்தோஷத்தை இந்த விளையாட்டின் மூலம் கொடுத்துள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆன்லைன் கேம் மூலம் உலகம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon