மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

சிகாகோ டீக்கடை : தொழிலாளர் நலனில் அக்கறை காட்டும் முதலாளி!

சிகாகோ டீக்கடை : தொழிலாளர் நலனில் அக்கறை காட்டும் முதலாளி!

ஒரு கார்ப்பரேட் மற்றும் ஐடி கம்பெனிகளில் எவ்வாறு ஊழியர்களுக்குச் சலுகை அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அடையாரில் உள்ள டீக்கடை ஒன்றில் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை சம்பள உயர்வு, தீபாவளி, பொங்கலுக்குப் புத்தாடையுடன் கூடிய போனஸ், இன்சென்டிவ், ஆகியவை அளிக்கப்படுகிறது.

உங்களால் இதை நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும். அது அடையார் காமராஜ் அவென்யூ-வில் உள்ள சிகாகோ டீக்கடையாகும். சென்னையில் எத்தனையோ டீக்கடைகள் இருந்தாலும், சிகாகோ டீ கடை அவற்றிலிருந்து வேறுபட்டுக் காட்சியளிக்கிறது.

தமிழகத்துக்கு வேலை தேடி வந்த மலையாளியான சுகுமாறன் 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டீக்கடை வியாபாரத்தைத் தொடங்கினார். அவர், பல டீக்கடைகளில் பணிபுரிந்து வந்தார். இறுதியில், அவரது முதலாளியுடன் ஏற்பட்ட சண்டையிலும், தொடர்ந்து வந்த சட்டரீதியான போரிலும், அவர் தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினார். தற்போது சென்னையில் ஐந்து இடங்களில் சிகாகோ டீக்கடைகள் இயங்கி வருகின்றன.

அவர், தான் தொழிலாளியாக இருக்கும்போது அனுபவித்த கொடுமைகளை, தனது தொழிலாளிகள் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து சுகுமாறன் கூறுகையில், சிகாகோ அமெரிக்காவிலுள்ள ஒரு நகரமாகும், அங்குதான் எட்டு மணிநேர பணியை வலியுறுத்தி முதல் போராட்டம் நடந்தது. என் கடையிலும் கூட, என் தொழிலாளிகளின் நன்மைகள் மற்றும் சரியான ஊதியத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதற்கு விரும்புகிறேன். நான் அவர்களுக்காகப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு இலவசமாக விடுதி மற்றும் உணவு வழங்குகிறேன். இதைத்தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கப்படுகிறது. என் ஊழியர்களுக்கு இதை செய்வதில் பெருமை அடைகிறேன். அவர்கள் என் கடையிலேயே கடைசி வரை வேலை பார்க்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. வேறு கடைக்கு செல்ல வேண்டுமென்றாலும், சந்தோஷமாக வழி அனுப்பி வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 61 வயதான ஒருவர் கூறுகையில், நான் இங்கு வருவதற்குக் காரணம், சுகுமாறனை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற டீக்கடைகளோடு ஒப்பிடும்போது, இவர் , ஊழியர்களுக்கு நல்ல முறையில் சம்பளம் வழங்குகிறார். அதுபோன்று, குறைந்த விலையில் தரத்துடன் கூடிய டீயை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார். சிகாகோ டீக்கடை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வாடிக்கையாளர்களைப் பெறுகிறது. அங்கு வந்த பலருக்கு, சுகுமாறனின் கொள்கை உத்வேகம் அளித்திருக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தன் ஊழியர்களுக்கு இவ்வளவு வசதி செய்து கொடுக்கும், இவர் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். இருப்பினும், பெருந்தன்மையுடன் தனது சுவையால் மட்டுமின்றி, உழைப்பை மதித்து ஊக்குவிக்கும் உரிமையாளராலும் என் கடை பாராட்டுகளைப் பெற்று வருகிறது என சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon