மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

ஆதாருடன் பிஎஸ்என்எல் எண்ணை இணைக்க உத்தரவு!

ஆதாருடன் பிஎஸ்என்எல் எண்ணை இணைக்க உத்தரவு!

பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட் இல்லாமல், கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு செல்பேசி மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, செல்பேசி பரிமாற்ற பாதுகாப்பை வலுப்படுத்தவும், சிம் கார்டு முறைகேடுகளைத் தடுக்கவும் செல்பேசி வைத்திருக்கும் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி. படிவத்தையும் ஒரு ஆண்டுக்குள் பெற வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அனைத்து செல்பேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டு என மத்திய அரசு உத்தரவிட்டது. பல தொலைப்பேசி நிறுவனங்கள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் நேற்று (ஆகஸ்ட்,10) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘அனைத்து செல்பேசி வாடிக்கையாளர்களும் தங்களின் செல்பேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள அருகில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையம் அல்லது விற்பனையாளர் அல்லது நேரடி விற்பனை முகவரை ஆதார் அட்டையுடன் நேரில் அணுக வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கவில்லை என்றால் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதிக்குப் பிறகு செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon