மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

மரக் கன்று நட்டால்தான் பர்த் சர்டிபிகேட்!

மரக் கன்று நட்டால்தான் பர்த் சர்டிபிகேட்!

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து சுதந்திர தின விழாவில் கொடியேற்றி உரை நிகழ்த்துவதற்கு முன்னர்...அந்த உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று மக்களிடம் யோசனை கேட்டு அதன்படி உரையில் மக்களின் கோரிக்கைகளையும் இடம்பெறச் செய்து வருகிறார்.

இந்த வருடம் வரும் சுதந்திர தின உரைக்காக... யோசனைகளை மோடியின் பர்சனல் மொபைல் ஆப் ஆன, ‘நமோ ஆப்’ மற்றும் mygov.in ஆகியவை வழியாக மக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார் மோடி. இந்த செயலிகளின் வழியே வரும் மக்களின் ஆயிரக்கணக்கான கோரிக்கைகள், ஆலோசனைகளைத் தொகுக்க தனி அதிகாரிகள் குழுவே இயங்கி வருகிறது.

மக்களிடம் இருந்து வந்த யோசனைகளின் முதல் தொகுப்பை ஆகஸ்டு 8 ஆம் தேதி பிரதமருக்கு அனுப்பி வைத்திருப்பதாக சொல்லும் இந்த குழுவின் அதிகாரிகள், அடுத்த தொகுப்பை விரைவில் பிரதமருக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.

பிரதமருக்கு மக்கள் அனுப்பியிருக்கும் கோரிக்கைகளில்... நாட்டில் சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டும், தரமான கல்வி வேண்டும், பெண்கல்வியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பல இருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாலூரில் இருந்து ஒருவர் பிரதமருக்கு அனுப்பிய யோசனையில், ‘இனி இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு பர்த் சர்ட்பிகேட் தரும்போதும், பிறந்த குழந்தையின் பெற்றோர் ஒரு மரக் கன்று நட்டதற்கான சான்றை அரசு கேட்டுப் பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தை பிறப்பின்போதும் ஒரு மரக் கன்று நடப்படவேண்டும். இதற்கான சான்றை அரசுக்கு அளிக்காவிட்டால் பர்த் சர்டிபிகேட் வழங்கப்படக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

நல்ல யோசனைதான்... பிரதமர் ஏற்பாரா என்று வரும் ஆகஸ்டு 15 அன்று தெரியும்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon