மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

பாதிதான் நிறைவேறியுள்ளது: பன்னீர்செல்வம்

பாதிதான் நிறைவேறியுள்ளது: பன்னீர்செல்வம்

‘நாங்கள் விதித்துள்ள நிபந்தனையில் பாதிதான் நிறைவேற்றப்பட்டுள்ளது; மீதமும் நிறைவேற்றப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்’ என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்த நிலையில், அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கூடி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். மேலும், தினகரன் அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும், கட்சியினரை கட்டுப்படுத்தாது எனவும் அறிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று (ஆகஸ்ட் 10) டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் எங்களுக்கு வந்துள்ளது. விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்துக்கு முன்பாக கூறிய கருத்துகளைத்தான் தற்போது அவர்கள் அறிக்கையாக தீர்மான வடிவில் கொண்டுவந்துள்ளனர். பாதிதூரம் வந்துவிட்டனர். மீதி தூரம் வரட்டும். அப்போது எங்களது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தவித அதிகாரபூர்வத் தகவல்களும் எங்களுக்கு வரவில்லை. இரு அணிகளும் இணைந்தால் அது தமிழக மக்களின், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon