மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதார்!

வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதார்!

வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கும்படி அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இலவச சமையல் எரிவாயு மானியம் உட்பட மத்திய அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறிவருகிறது. சமீபத்தில் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற ரீதியில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாகனப் பதிவுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கும் முயற்சியில் தெலங்கானா அரசு இறங்கியுள்ளது. கடந்த புதனன்று தெலங்கானா போக்குவரத்துத்துறை அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘தெலங்கானாவில் சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதுபோல் அதிக அளவு வாகனங்கள் இரண்டாம் தரமாக விற்கப்படுகின்றன. எனவே, புதிய வாகனத்தைப் பதிவு செய்யவும். பழைய வாகனத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்யவும் ஆதாரைக் கட்டாயமாக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய வாகனத்தை வாங்குபவர்களின் மொபைல் எண், ஆதார் எண், விலாசம் ஆகியவற்றைப் போக்குவரத்துத்துறை வலைத்தளத்தில் பதிவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை இரண்டாம் தரமாக வாங்குபவர்கள் பெரும்பாலும் அதைத் தமது பெயருக்கு மாற்றுவதில்லை. இதனால் வாகனத்தின் காப்பீடும் பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருந்துவிடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு” என்று கூறப்படுகிறது.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon