மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது!

போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது!

சென்னையில், தங்களுக்கு ஒதுக்கப்படும் சமூக நலன்களில் உள்ள முரண்பாடுகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 800-க்கும் மாற்றுத்திறனாளிகளை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் ஆர்வலர் எஸ்.நம்புராஜன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் சாலையில் செல்வதை அறிந்துகொண்ட போராட்டக்காரர்கள் காமராஜர் சாலையில் அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, அமையதியாக நடந்துவந்த போராட்டம், காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு கலவரமாக மாறியது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் சுற்றி வளைத்து மாநகரப் பேருந்தில் அடைத்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த கே.வீரபாண்டி கூறுகையில், “அரசு எங்களுக்கு மாதம் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இந்தத் தொகை மருத்துவச் செலவுக்கே போதாது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பல்வேறு திட்டங்களின்கீழ் வரவேண்டிய சலுகைகளில் அரசு மிக குறைந்த அளவுதான் எங்களுக்கு அளிக்கிறது. வருவாய் அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் சில புதிய கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரவணன் என்பவர் கூறுகையில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஆனால், எங்களுக்கு மாநில அரசு அளிக்கும் எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“இதில், மனநலம் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் கலந்துகொண்டனர். இதனால் காவல்துறையினர் இவர்களை விரட்டிய செயல் கண்டிக்கத்தக்கது” என்று போராட்டக்குழுத் தலைவர் எஸ்.நம்புராஜன் கண்டித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon