மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 10 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: தனியார் பேருந்துகளின் கொள்ளைத் திருவிழா!

சிறப்புக் கட்டுரை: தனியார் பேருந்துகளின் கொள்ளைத் திருவிழா!

திருச்சி போகுமா?

போகும் ஏறு ஏறு...

டிக்கெட் எவ்வளவு?

ஏ... ஏறப்போறியா? இல்லையா? சொல்லு. ரை... ரைட்...

இருங்க, இருங்க.

ஏறு. போய் கடைசில சீட் பாத்து உக்காந்துக்க. நான் ஆள் ஏத்திட்டு வர்றேன்.

கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய பேருந்து ஐந்து மணிநேரம் கழித்து செங்கல்பட்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது, எந்த விதத்திலும் நடத்துநர் என்ற பதவிக்குச் சம்மந்தம் இல்லாத ஒருவர் திருச்சியா? ஆயிரம் ரூவா எடுங்க என்று கேட்கும்போது, மாதக் கடைசியில் மொத்தமே ஆயிரம் ரூபாயுடன் சென்று திரும்பிவிடலாமென ஊருக்குப் பயணமாகும் ஒரு சாமான்யனின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? செங்கல்பட்டு தாண்டிய பிறகான கும்மிருட்டில் எங்கே இறங்குவது, எந்தப் பேருந்தில் ஏறுவது என்ற கவலையுடன் கையிலிருந்த ஆயிரத்தையும் கொடுத்துவிட்டு, பணம் கொடுக்கவேண்டிய மனைவியிடமே திரும்பிச் செல்லப் பணம் கேட்கும் நிலை ஏற்பட்ட கணவனின் மனசாட்சி என்ன கேட்கும்?

இது கடந்த வருடம் திருச்சிக்குப் பயணமான ஒரு சாமான்யனின் கேள்வி. இப்போது ஆகஸ்ட் 12 முதல் 15 வரையிலான தொடர் நான்கு நாள்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்ய முயன்றபோதும் அதேபோன்றதொரு அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இம்முறையும் எவ்விதச் சலனமுமின்றி நேரடியாகவே கொள்ளைகளைத் தொடங்கியிருக்கின்றனர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி வாரத்தின் ஆரம்பத்தில் இருப்பதால், ஊருக்குப் பயணமாகும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதனால், அந்த நாள்களில் 300 ரூபாய் வரை டிக்கெட் விலையைக் குறைக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள், தொடர் விடுமுறையான வார இறுதிப் பயண நாளில் கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை டிக்கெட் விலையை அதிகப்படுத்துகிறார்கள். வார நாளில் விட்டுக்கொடுத்த 300 ரூபாய்க்கும் மேலாக 200 ரூபாயை வைத்து சம்பாதித்து விடுகிறார்கள். இப்படியெல்லாம் டிக்கெட் விலையில் தனியார் பேருந்துகள் நடத்தும் கொள்ளை வியாபாரம் தொடர்ந்தாலும், இந்தப் பேருந்துகளுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு குறைந்திருக்கிறதா என்றால், இல்லை.

‘சதுரங்க வேட்டை’ படத்தில் சொல்லும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவர்களது ஆசையைத் தூண்ட வேண்டும் என்ற வசனத்தைத் தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படும் இந்தத் தனியார் பேருந்துகள் மக்களை எப்படி கவர்கின்றன என்று சென்னை முழுவதிலும் சுற்றித் திரிந்து சேகரித்த சில தகவல்களை வாசகர்களுக்கு இங்கே சமர்ப்பிக்கிறோம்.

1. அரசாங்கத்தின் அலட்சியம்

சாமானியனின் பயண வழிகளில் பேருந்துப் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நகரங்களின் சாலைகளிலுள்ள திடீர்ப் பள்ளங்களில் விழுந்து எழுந்து ஓடும் லோக்கல் பேருந்துகளின் நிலையைப் போலவே, குறைந்தது 3 மணி நேரத்துக்கும் மேலாகப் பயணப்படும் பேருந்துகளும் இருப்பது அரசு பேருந்துகளை மக்கள் ஒதுக்குவதன் முக்கியக் காரணம். ஏ.சி. பொருத்தப்பட்ட பேருந்துகள்தான் வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை. நகரங்களைத் தாண்டி கிராமத்தின் வழியாக பயணப்படும் பேருந்தின் ஜன்னல் வழியே வரும் காற்றை ரசிக்கவே பேருந்துப் பயணத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மக்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் குறைந்தபட்ச வசதியாகக் கேட்பது நல்ல இருக்கைகள். ஐந்தரை அடிக்கும் மேலாக உயரமாக இருப்பவர்காளால் காலை மடக்கியும் வைக்க முடியாமல், நீட்டினால் இரண்டாவது சீட்டு வரை செல்லும் வகையிலும் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளைத்தான் மக்கள் எதிர்க்கிறார்களே தவிர, அரசு பேருந்து என்ற காரணத்தால் ஒதுக்கிவிட்டு, அதிகப் பணம் கொடுத்து தனியார் பேருந்தில் செல்வதில்லை. தூரமானப் பயணத்துக்கு அடிப்படைத் தேவையான இருக்கைகளைக்கூட மக்களுக்குச் சரியாக வழங்க முடியாத அரசு, தனியார் பேருந்துகள் மேற்கொள்ளும் அலட்சியப் போக்கைப்பற்றி கண்டுகொள்வதில்லை.

2. மக்களின் சொகுசு

தனியார் பேருந்துகளின் இந்த அராஜகத்துக்கு அரசாங்கத்தை மட்டும் குறைகூறுவதில் எந்தப்பயனும் இல்லை. மேலே சொல்லப்பட்டதற்கு நேர்மாறாக இது இருப்பதாக நினைக்கலாம். ஆனால், எப்படிப்பட்ட அரசாக இருந்தாலும் அதன் மக்களின் பிரதிபலிப்பாகவே அது இருக்கிறது. அரசு பேருந்துகளைத் தவிர்த்து, தனியார் பேருந்துகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியக் காரணம், அவை மக்களை அவர்களது வீட்டுக்கு அருகில் சென்று பிக்-அப் செய்து கொள்கின்றன. இதை ஏன் அரசு பேருந்துகளால் செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழும்போதுதான் இதில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் அம்பலமாகின்றன.

சென்னை நகரத்தில் அதிகமான மக்கள்தொகை பயணமாகக்கூடிய நேரத்தை Peek Hours என்று குறிப்பிட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் இந்தச் சமயத்தில் நகரத்துக்குள் வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு 8 மணிக்கு முன்பாகவே இவர்கள் நகரத்துக்குள் புகுந்து செய்யும் அட்டூழியத்தால், 8 மணிக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டியவர்கள் 10 மணிக்குத்தான் செல்கிறார்கள். சென்னை புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பூந்தமல்லி வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையைப் பிடித்து பெருங்களத்தூர் வந்து சேர்வதே தென் தமிழகம் செல்லும் அரசு பேருந்துகளின் வழக்கமான வழி. சென்னையிலிருந்து பயணமாகும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தென் தமிழகத்துக்குப் பயணமாவதால் அந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகம். எனவே, தென் தமிழகம் செல்லும் அரசு பேருந்துகளுக்கு இந்த வழி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த வரைமுறைகளுக்குள் எந்தத் தனியார் பேருந்தும் அடைபடுவது இல்லை. கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் தனியார் பேருந்துகள் வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர் மெட்ரோ (கிண்டி), திரிசூலம் (ஏர்போர்ட் எதிரில்), பல்லாவரம், குரோம்பேட்டை , தாம்பரம் சேனடோரியம், தாம்பரம் பேருந்து நிலையம் வழியாக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தைச் சென்றடைகின்றன. இதனால், அரசு பேருந்துகள் எந்தக் காரணத்துக்காக நகரத்தின் இதயப்பகுதிக்குள் வராமல் நேராக கோயம்பேடு செல்ல வழிவகை செய்யப்பட்டதோ அந்தக் காரணமான போக்குவரத்து பாதிப்பு இனிதே நடைபெற்று வருகிறது. கோயம்பேடு பகுதியிலிருந்து எளிதாகப் புகுந்து சென்று போக்குவரத்து நெரிசலைக் கண்டு அஞ்சாத இருசக்கர வாகனம் பயன்படுத்துவோருக்கும், தனியார் பேருந்துகளால் உருவாகும் வாகன நெரிசல் மிகப் பெரிய சவாலாக அமைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

அதிகமாகிவிட்ட வாகனங்களின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. பேருந்து இருக்கைகள் முழுவதும் நிறையும்வரை ஜி.எஸ்.டி சாலையில் பாதி வரை ஆக்கிரமித்து நிற்கும் இந்தத் தனியார் பேருந்துகளால் மட்டுமே இந்த நெரிசல் ஏற்படுகிறதென்பது ஊரறிந்த உண்மை. ஆனால், இதில் எவற்றையுமே பொருட்படுத்தாமல் என் வீட்டுக்கு அருகிலேயே என்னை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் மக்களால்தான் தனியார் பேருந்துகள் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்துகின்றன என்பதும் மறுக்க முடியாதது. மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் அரசுதான்.

3. மக்களின் தேவை என்ன?

ஏன் உங்களால் பெருங்களத்தூர் அல்லது கோயம்பேட்டில் சென்று பேருந்தில் ஏறிக்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு மதுரை செல்லும் ராஜா முத்தையாவின் பதில் பொருத்தமாக இருக்கும். சென்னை நகரத்துல எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும் சார். ஆனால், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கோ, பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கோ போறதுக்கு எங்களுக்கு என்ன வழி இருக்கு? கோடம்பாக்கம் இல்லைன்னா கிண்டில இறங்கி மறுபடியும் பஸ் புடிச்சு நாங்க கோயம்பேடு போகணும். திடீர்னு யாராவது அரசியல் தலைவர்களோ அல்லது ரோட்டுல பள்ளமோ விழுந்துட்டா டோட்டல் சிட்டியே குளோஸ் ஆகிடும். அப்பறம் நாங்க எப்படி பஸ் புடிக்கிறது. சரி, இந்த மாதிரி சோஷியல் ரீசனால பேஸஞ்சர் வர்றதுக்கு லேட் ஆச்சுன்னா பஸ் காத்திருக்குமான்னு கேட்டா, இல்லை. என் டிக்கெட்டை இன்னொருத்தனுக்கு கொடுத்துட்டு கோயம்பேடுல இருந்து பஸ் கிளம்பிடும். அந்த சமயத்துல, பெருங்களத்தூர்ல பஸ் ஏறலாம்னு கிளம்புனா அந்த ரூட்டும் டிராஃபிக். ரோடு மூலமா இல்லாம பெருங்களத்தூர் ரீச் ஆகணும்னா, எங்களுக்கு இருக்க ஒரே வழி டிரெயின் சர்வீஸ்தான். ஆனால், பெருங்களத்தூர் போகும் செங்கல்பட்டு டிரெயின் அரைமணி நேரத்துக்கு ஒரு டிரெயின்தான் வரும். அந்த டிரெயின்ல வழக்கமா போறவங்களே நிக்க இடமில்லாம போகும்போது, ஊருக்கு பையும், சூட்கேஸுமா போற நாங்க ஏறினால் ஏதோ வில்லனைப் பாக்குறா மாதிரி பாக்குறாங்க. பெருங்களத்தூருக்கு பஸ் ஸ்டாண்டு மாத்தியதும் இந்த கவர்ன்மெண்ட் என்ன செய்திருக்கணும். செங்கல்பட்டு டிரெயினை அதிகமா விட்டிருக்கணுமா, இல்லையா? மக்களின் வழக்கமான பயணச் சூழல் மாறும்போது, அரசாங்கமும் அதே திசைல சுழலாம இருந்தா இந்தமாதிரியான ஆட்கள் கொள்ளையடிக்கிறது தாராளமா நடக்கும். இப்பவே 1,200 ரூபாய் வரைக்கும் வாங்குறாங்க. கொஞ்ச நாள் போச்சுன்னா இந்த விலை இன்னும் இரண்டு மடங்கு ஆகும் என்று காரமாகவே பதிலளித்தார்.

4. யார் மீது குற்றம்?

சுற்றிச்சுற்றி மீண்டும் அரசாங்கத்திடமே வந்து நிற்கிறோமே என்று தோன்றுகிறதல்லவா? இதன் முடிவு எங்கேதான் இருக்கிறது என்று அரசாங்கத்தின் ஒரு தூணாகிய காவல்துறையிடமே தஞ்சம் புகுந்தோம். பெருங்களத்தூரில் டிராஃபிக் போலீஸாக வேலைசெய்யும் அவர், பெயர் சொல்ல மறுத்துவிட்டுச் சில தகவல்களைச் சொன்னார். நான் என்ன வேலை சார் செய்றேன். டிராஃபிக் போலீஸ்தான். என் வேலை டிராஃபிக் கண்ட்ரோல் பண்றதுதான். வரிசையா வந்து நிற்கும் பஸ் எல்லாத்தையும் துரத்திவிடுறதுதான் என் வேலை. அதை நான் நல்லாவே செய்றேன். ஆள் ஏத்தாம போனா ஓனர் திட்டுவார்னு பஸ் ஆளுங்க கெஞ்சும்போது கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவா நிக்க சொல்லுவோம். மத்தபடி எங்களுக்கும் எல்லா பஸ்ஸையும் அனுப்பிட்டு டிராஃபிக் இல்லாத ரோட்டுல நின்னு வேடிக்கை பாக்குறதுதான் புடிக்கும். இந்த பஸ்ஸை எல்லாம் கண்ட்ரோல் பண்றது ஆர்.டி.ஓ. வேலை. இவங்களையெல்லாம் ஏத்திக்கிட்டு போற பஸ்ல எத்தனை பஸ் ஆர்.டி.ஓ. டெஸ்ட்ல பாஸ் ஆனதுன்னு யாருக்காச்சும் தெரியுமா? பஸ்ஸுக்கு பர்மிட் இருக்கா? டிரைவர்கிட்ட லைசன்ஸ் இருக்கான்னு நாங்க இங்கயே பஸ்ஸை நிறுத்தி செக் பண்ணா? தீபாவளிக்கு கிளம்புனவங்க பொங்கலுக்குத்தான் போய் சேருவாங்க. அன்னிக்கு ஒரு பஸ் இங்க ஆக்சிடண்ட் ஆகிடுச்சு. அவசரமா இறங்குன டிரைவர், யாருக்கோ ஃபோன் போட்டு “அண்ணே பஸ்ஸை தட்டிட்டாங்க. அந்த இன்னொரு பஸ் எங்க இருக்குன்னு பார்த்து நிறுத்துன்னு” சொல்றான். ஒரே நம்பர், ரெண்டு பஸ். இதையெல்லாம் யார் இப்ப செக் பண்றாங்க. இதையெல்லாம் விடுங்க. பஸ்ஸுல கொரியர் அனுப்புறாங்கள்ல, அந்த கொரியர்ல என்ன இருக்குன்னு ஏதாவது செக்கிங் இருக்கா? ஏதாவது இன்ஃபார்மர் சொன்னால் மட்டும்தான் செக் பண்ணுவாங்க. மத்த நாளெல்லாம் என்ன நடக்குது? இப்படி கிணறு தோண்ட பூதம் வந்த கதையா நிறைய இருக்கு என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

அரசாங்கத்தின் ஒரு கவனக்குறைவினால் எத்தனை குற்றங்கள் தமிழ்நாடு முழுவதும் கட்டவிழுத்து விடப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்று உணரும்போது மனதில் உண்டாகும் பயத்துக்கு அளவில்லை.

மக்கள் மாறினால் இந்தக் குற்றங்கள் குறையுமா, மக்களின் மாற்றத்தினால் தனியார் பேருந்துகள் கட்டணத்தைக் குறைப்பார்களா என்றெல்லாம் விவாதிப்பதைவிட, அரசாங்கம் இந்த மக்களுக்காக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியை நோக்கிப் பயணிப்பதே ஒரு தீர்வை நோக்கிய வழியாக இருக்கும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீடியா முன்னிலையில் தெம்பாகக் கூறியிருக்கிறார். இதேபோல கடந்த வருடமும் ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் செயலர் இளங்கோவன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இந்த நடவடிக்கைக்கான ஆதாரங்கள் அவர்களது கண்முன்பாகவே கம்ப்யூட்டரில் சிரித்தபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் யாராவது புகாராகக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். மக்களின் அத்தியாவசியத் தேவையை சாதகமாகக் கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டத்தை ஒடுக்கப் புகார் தேவையில்லை. இன்று மாலைகளாகவும், பாராட்டுகளாகவும் குவியும் அனைத்தும் மக்கள் வாக்குச்சாவடியில் செலுத்திய ஓட்டுகள்தான் என்று உணர்ந்து மக்களுக்கான அரசு என்பதை ஏட்டளவில் இல்லாமல், செயல்வடிவத்தில் காட்டினாலன்றி இதற்குத் தீர்வு பிறக்காது. விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் ஆசையுடன் முக்கியமாக பஸ்ஸைப் பிடிக்க வேகமாக ஓடும் பயணிக்குப் பார்க்கச் செல்லும் உறவினர்கள், நண்பர்கள் மீது மட்டும்தான் கவனம் இருக்கும். பர்ஸ் மீதல்ல. அவர்கள் பாதுகாப்பாகவும் நியாயமான கட்டணத்திலும் பயணம்செய்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது.

- சிவா

வியாழன், 10 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon