மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 9 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

இதை எழுத தொடங்கும் இந்நேரம் திருவனந்தபுரத்தில் ஒரு மணப்பெண் தாலி ‘கட்டியப் பிறகு’ மணமகனிடம் தன் முந்தைய காதலனை அறிமுகம் செய்து வைத்தபோது தகராறு ஏற்பட்டதாகச் செய்தி வாசிக்க நேரிட்டது. உடனே அந்த மணமகன் அந்தக் கல்யாணத்தை நிறுத்துமாறு கூச்சலிட்டிருக்கிறார். தான் கட்டிய ஒன்பது பவுன் தாலியும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் திரும்பி வாங்கிக்கொண்டு, காவல் நிலையத்தில் போய் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகப் பதினைந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.

காதல் பெண்களுக்கு வராது... அதுவும் தன் வீட்டுப் பெண்களுக்கு வரவே வராது என்று சமூகம் இன்றுவரை நம்புகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார். பல காதல்களைக் கடந்தப் பிறகு இக்காதலை கண்டேன் என்று. ‘இக்காதல்’ என்று தற்போதைய காதலை அவர் குறிப்பிடும்போது ‘அக்காதல்’ அல்லது அக்காதல்கள் என்று ஒன்று இருந்திருப்பதாகத்தான் அர்த்தம் இல்லையா?

அவர் அப்படி வெளிப்படையாய் சொல்லும்போது அவரிடம் எந்த தயக்கமுமில்லை. ஆனால், அப்படி அவர் காதலித்த பெண்கள் தயக்கமில்லாமல் சொன்னால் அவரது குடும்பம் அவரை சுற்றிய சமூகம் அதை ஏற்றுக்கொள்ளுமா? ஒருவிதமான புருவ சுளிப்போடு அதைச் சமூகம் எதிர்கொள்ளும். பழி சொல்லும். விலக்கி வைக்கும். அதை அந்தப் பெண் தாங்கும் வலு இருந்தால் தாங்கிக் கொள்வாள். இல்லையென்றால் சமூகம் தரும் அவப்பெயரோடு வாழ்வாள்.

நான் காதலித்தபோது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். இதை நான் சொல்லும்போது பலவிதமான எதிர்வினைகளை நான் சந்தித்தேன். பிஞ்சிலேயே பழுத்துட்டியா என்னும் கொச்சையான கேள்வி உட்பட பல கேள்விகளை நான் கேட்டிருக்கிறேன். காதல் என்பதே கெட்ட சொல்லாகிவிட்ட நம் சமூகத்தில் மனதுக்குள் என் காதலனைத் துணைவராக வரித்து வாழும் வாழ்வின் வீரியம் புலப்படாது. வாழ்வின் வேறெந்த தருணத்தில் சந்தித்து தன் காதலைச் சொன்ன எந்த ஆணின் காதலும் அவனது காதலுக்கு நிகரானதல்ல. இன்று அக்காதல் வேறொரு பரிணாமக் கிளையில் ஆத்மதுணையாக பரிமளிப்பது பிஞ்சில் பழுத்ததால் என்றால் என் பதில், இருக்கட்டும்... அதற்கென்ன என்பதுதான்.

இப்படி சமூகத்தை எதிர்கொள்ள நான் நிறைய அவமானங்களையும் வலிகளையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், நிச்சயமாக சென்ற ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி அவளோடு இருந்த ஆணின் தோளில் வைத்து நடக்க செய்து பின்னால் ‘பாரத் மாதாகி ஜே’ என்னும் குரலோடு பின்வரும் கூட்டத்தை சகித்த பெண் போல அல்ல. கடந்த இரண்டு நாள்களாய் மறுபடி இது இணையத்தை நிறைத்திருக்கிறது.

ஆனால், இது சென்ற வருடத்துப் பதிவு என்றும் அது கள்ளக்காதல் தொடர்பானது என்றும் அதனால் அதை சட்டை செய்ய தேவையில்லை என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் குரல் ஒலிக்கின்றன. சென்ற வருடம் நடந்ததால் அதை நிராகரிக்க முடியுமா? கள்ளக்காதல் என்றால் நிர்வாணப்படுத்த இயலுமா? கள்ளக்காதல் என்பது என்ன? ஒரு பந்தத்தில் இருக்கும்போது இன்னொரு நபர் மேல் ஏற்படும் காதலையே கள்ளக்காதல் என்று இந்த சமூகம் அழைக்கிறது.

ஆனால் ஒருபோதும், ஏன் அப்படி ஒரு உறவு இந்த சமூகத்தில் இத்தனை கேவலமான அடைமொழிகள் வைத்து அழைத்தப்பிறகும் மலர்கிறது என்ற புரிதல் இங்கு இல்லை. காதலற்ற, பிரியங்களற்ற வெளியில் ஒரு மூச்சுக்காற்றை சுவாசிப்பது போன்றதுதான் இத்தனை உறவுகள். ஏன் இன்றைய பல அங்கீகரிக்கப்பட்ட உறவுகளில் காதல் பட்டு விடுகிறது? எல்லோருமே ஒருவிதமான டைம் டேபிள் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரும். ஆனால் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாத உறவு என்ன உறவாக இருக்க முடியும்? இவ்விடத்தில் மூன்றாவதாக ஒரு நபர் சொல்லும் அன்பான ஒரு வார்த்தை உறவாக மாறி விடுகிறது. இப்படியான உறவில் கணவன் ஈடுபட்டால் அவர்களின் காதல் தோற்றுவிட்டது என்பதும் இன்னொரு அன்பும் காதலும் “கள்ளக் காதல்” என்னும் அடைமொழியின்கீழ் ஜெயிக்கிறது என்பதுமே அர்த்தம். இதை சொல்ல தயக்கங்கள் ஏதுமில்லை எனக்கு. கலாசார காவலர்களும்... ஏன், சட்டமும்கூட இதை யோசிக்க வேண்டும்.

வெண்ணிலாவின் நினைவு எனக்கு இதை எழுதும்போது வருகிறது. அவரை அத்தனை நல்லப் பெண்ணாக எங்கள் ஊரே அறியும். படித்தவுடன் திருமணம், முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வீட்டில் வாகன ஓட்டுநராக இருந்தவரோடு வாழ சென்று விட்டார். காவல் நிலையத்தில் வைத்து பேசியதில் கணவர் அடிக்கிறார்; போக விருப்பமில்லை என்று சொல்லி இருக்கிறார். பின் கணவர், குழந்தையை தன்னிடம் வாங்கிக் கொண்டார். அந்த கணம் நான் அங்கிருந்தேன். வெண்ணிலாவின் கண்ணீரும் கதறலும் அந்த வெளியை நிறைத்தது. ஓட்டுநருடனான தன் உறவை முறித்துகொள்ள வைக்கப்பட்டார். குழந்தையை முன்வைத்து உணர்வு பேரங்கள் நிகழ்த்தப்பட்டன.

இங்கு சாதி வெறியின் உச்சமாய் இத்தனை அராஜகங்களும் நடைபெறுகின்றன. சகிப்புத்தன்மையும் பல்வேறு கருத்தியல்களை உள்ளடக்கி ஏற்றுக்கொள்ள இயலா தன்மையும் நிறைந்திருக்கின்றன. அராஜகமும் வன்முறையும் விளையாடும் பூமியில் சாதி ஒழிப்பு சாத்தியப்படுவதை விடவும் சாதீய நுண்பிரிவுகளில் மனித மனம் தஞ்சமடைவது மிகுந்த வேதனையாய் உள்ளது.

தோழர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் தங்கள் சாதியினர் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்று அவருக்கு அசிங்கமான ஆபாச அலைப்பேசி அழைப்புகள் வருவதை எப்படி ஏற்க இயலும்? ஒருவேளை மாற்றுக் கருத்தை ஏற்றுக்கொள்ள மனநிலை இருந்தபோதும் அசிங்கமான வார்த்தைகளால் ஒரு நபரை தாக்குவதென்பது என்ன தர்மமாகும்? அதை இந்த அரசாங்கம் மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது எதைக் குறிக்கிறது?

திரையரங்குகளில் மட்டும் ஜனகணமண பாடுவதென்பது போதுமா? அப்படித்தான் திரு.மோடிக்கும் திரு.எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா?

இந்த வாரம் வந்த மின்னஞ்சல் மிக வலி நிறைந்தது... சுருக்கமானதும்.

அக்கா,

உங்கள் தொடரில் பல விஷயம் பேசுகிறீர்கள். என் கணவர் என் முன்னமே பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறார். என்னால் எதுவுமே செய்ய இயலவில்லை. சாக தோன்றுகிறது. யாரின் ஆறுதலும் பக்கபலமும் இல்லை..

இந்த மின்னஞ்சலையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறேன்.

அவர்களிடையே நீங்கள் சந்தேகிக்கும் உறவு இருப்பின் முதலில் பேசுங்கள். அது தோல்விடைந்தால் நீங்கள் வெற்றியடைய வெளியே வாருங்கள்...

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

புதன், 9 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon