மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

ராணுவம் - போலீஸ் மோதல்!

ராணுவம் - போலீஸ் மோதல்!

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று ஜூலை 22ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட மோதலில் ஏழு போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பெல் மாவட்டத்தில், பல்தால் முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரைக்காகப் பாதுகாப்பு பணிக்குச்சென்ற ராணுவ வீரர்கள் சிலர் தங்கள் முகாமுக்குத் திரும்பிச் செல்லும் வகையில் கனரக வாகனங்களில் நேற்று ஜூலை 22ஆம் தேதி சென்றுகொண்டிருந்தனர். ராணுவ வீரர்களின் வாகனம் சோன்மார்க் சோதனைச்சாவடி அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் வாகனங்களை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

ஆனால், ராணுவத்தினரின் வாகனங்கள் அந்தச் சோதனைச் சாவடியில் நிற்காமல், தொடர்ந்து வேகமாக சென்றது. இதனால், ஆத்திரமடைந்த சோதனைச் சாவடி போலீஸார் அருகி்ல் உள்ள கண்டு சோதனைச் சாவடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து, ராணுவ வீரர்களின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தும்படி கூறியுள்ளனர். அதன்பேரில் கண்டு சோதனைச் சாவடி போலீஸார் ராணுவ வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகியது. இந்நிலையில், ராணுவத்தினரின் வாகனங்களை முன்னே செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று போலீஸார் தெரிவித்ததையடுத்து, அருகில் உள்ள ராணுவத்தினரை, சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராணுவ வீரர்கள் அழைத்துள்ளனர். துணைக்கு சக ராணுவ வீரர்கள் வந்ததும், போலீஸாரைச் சரமாரியாக தாக்கி சோதனைச் சாவடியைச் சூறையாடினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட ஏழு போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த போலீஸார் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மூத்த ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து, ராஷ்டிரிய ரைபிள்சின் 24ஆவது பிரிவு படை வீரர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon