மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

வாரியத் தலைவர் பதவி: முதல்வர் முடிவு!

வாரியத் தலைவர் பதவி: முதல்வர் முடிவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதையடுத்து சசிகலா தலைமையில் அம்மா அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரு அணிகளாகின.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் அவரை வெளிப்படையாகக் கேலி, கிண்டல் செய்து பேசி வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறைகள் மூலமாகக் கோடிக்கணக்கில் வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தொகுதியில் நடைபெறும் வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்றும், ஏதாவது குறை என்றால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை நேரடியாகச் சந்திக்கவும் அனுமதி கொடுத்து, எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

இதுபோன்ற சலுகைகள் அதிமுக உருவான காலத்திலிருந்து இதுவரை இல்லை என்பதால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதை வைத்து பார்த்துதான், ஓ.பி.எஸ். அணிக்குச் சென்ற எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி அணிக்கு தற்போது திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், மாவட்டந்தோறும் விரக்தியில் இருக்கும் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் செல்வாக்குள்ள அதிமுக பிரமுகர்களை அழைத்துப் பேசிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அதற்கு, ‘கவலைப்படாமல் போய் கட்சிப்பணியைப் பாருங்கள். உங்களுக்கு வாரியத் தலைவர் பதவியைத் தருகிறேன்’ என்று முதல்வர் உறுதி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக முக்கியப் பிரமுகர்களுக்கு வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்து, கோஷ்டிகளை ஒருங்கிணைத்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க முதல்வர் திட்டமிட்டு வருகிறார்.

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon