மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: பெயர் - வயது - பால்: மூன்றாம் பாலினம்!

சிறப்புக் கட்டுரை: பெயர் - வயது - பால்: மூன்றாம் பாலினம்!

சௌந்தர்யா, காவ்யா, சாரா, திலீப் என்பவர்கள் வரவேற்பாளர், இதழியலாளர், ஆசிரியர், பதிப்பாசிரியர் பணிகளுக்கு தங்களது பயோடேட்டாக்களை அனுப்புகின்றனர். அதில் அவர்களது கல்வித் தகுதிகள், மொழிப் புலமைகள், எழுத்து, பேச்சு மற்றும் தொடர்பியல் திறன்கள் போன்ற தகுதிகள் இருக்கின்றன. அந்த பயோடேட்டாக்களை அந்தந்தத் துறைகளின் பணித்தேர்வாளர்கள் திரையில் வாசித்து அவர்களுக்கு வாய்ப்புத் தர முன்வருகின்றனர். ஆனால், ஒரு கூடுதல் தகவல் அந்த பயோடேட்டாக்களில் உள்ளது. அவர்கள் திருநங்கை, திருநம்பி, பார்வைத்திறனற்றவர்.

பணி தேர்வாளர்கள் அவர்களின் திறமைகளை மட்டும் கணக்கில் கொண்டும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் பணியிடங்களில் சம உரிமைத் தர வேண்டும், இந்தத் தலைமுறையில் இருந்து அவர்களின் மீதான பொதுப் புத்தி பார்வைகள் மறைந்து மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்று சொல்லி சௌந்தர்யா, காவ்யா, சாரா, திலீப் ஆகியோருக்கு பணி உத்தரவாதம் தருகின்றனர். 'ஒரு வாய்ப்பு. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பணியிடங்களில் சம உரிமை' என்று 1 நிமிடம் 38 நொடிகளில் புரிதலை உண்டாக்கும் பெரும்செய்தியை நமக்கு சொல்லிவிட்டு முடிகிறது 'PERI FERRY' என்ற அமைப்பு வெளியிட்ட அந்த காணொளி.

சென்னையைச் சேர்ந்த நீலம் பல்ரேச்சா மற்றும் ஸ்டீவ்ஸ் சு இராட்ரிக்ஸ் தனது நண்பர்களோடு சேர்ந்து, கடந்த மே மாதம் தொடங்கியதுதான் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை உண்டாக்கித் தரும் PERI FERRY அமைப்பு.

‘பொது இடங்களில் என்னால் திருநங்கைகளை எளிதாக கடந்து போக முடியவில்லை. கல்லூரி படிக்கும்போதிருந்தே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அதை செயல்படுத்த இப்போதான் நேரம் வந்திருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் அவர்களுக்கு நாம் எந்த மாதிரி உதவலாம் என்று நினைத்தபோதுதான் இந்த PERI FERRY (www.periferry.com) அமைப்பைத் தொடங்க எண்ணம் வந்தது. இதற்காக எட்டு மாதமாக நிறைய திருநங்கைகளைப் பார்த்துப் பேசினோம். அவர்களுடைய படிப்பு, குடும்பம், வருமானம், பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்குற வேலைக்கும் அவர்கள் தள்ளப்பட்ட அவல சூழ்நிலைகளைக் கேட்டு தெரிந்து கொண்டோம்.

திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய நிறைய அமைப்புகள் இயங்கி வந்தாலும் அவர்களது பொருளாதாரம் மற்றும் பணி உத்தரவாதத்துக்கு இன்னும் தீவிரமாக இயங்கக்கூடிய அமைப்புகள் வேண்டும். அதை குறிக்கோளாய் கொண்டதுதான் இந்த அமைப்பு” என்கிறார் அமைப்பின் நிறுவனர் நீலம் பல்ரேச்சா.

“சின்னப் படகு மூலமா விளிம்பு நிலையில இருக்குற மக்களை அடுத்தக் கரைக்குக்கொண்டு செல்வோம் - இதுதாங்க PERI FERRY-க்கு அர்த்தம். திருநங்கைகள் மீதான என்னோட பார்வையை மொத்தமா மாத்தின இடம் கூவாகம் திருவிழாதான். அங்கப் போய் அவங்கள புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும்போதுதான், அவங்க வாழுற வாழ்க்கை முறையை நான் புரிஞ்சுக்கிட்டேன். அவங்கக்கிட்ட அபரிமிதமான அன்பு இருக்கு. தன்னைத்தானே காப்பாத்திக்க அவங்கக்கிட்ட இருந்து வெடிக்கிற கோபங்களை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. தொடர்ந்து திருநங்கைளை புகைப்படங்கள் மூலமா ஆவணப்படுத்திட்டு வந்தேன்.

என்னோடத் தோழி நீலம் பல்ரேச்சாவும் திருநங்கைகளுக்கான களப்பணிகள்ல தீவிர ஆர்வமா இருந்தாங்க. அடுத்தகட்ட நகர்வா தோழி நீலம் முன்னெடுக்க நானும் எங்களோட நண்பர்களான நந்திதா ரவீந்தர், திரிஷாலா, பரா, செபஸ்டியன் ஜோசப் சேர்ந்து அமைப்பைத் தொடங்கி இருக்கோம். சமூகத்துல திருநங்கைகள் மீதான பார்வை மாறணும். அதுக்கு அவுங்க வேலை, பொருளாதார ரீதியில தனிச்சு நிக்கணும். இது நடக்க கண்டிப்பா நெறைய காலம் பிடிக்கும். அதோட ஆரம்பம்தான் PERI FERRY.

பகல் நேர பயணங்கள், இரவு நேர சென்னையில நாங்க பல திருநங்கைகளைப் பார்த்து, இந்த அமைப்போட நோக்கத்தைப் பத்தி பேசி போன் நம்பர் கொடுத்துட்டு வருவோம். அந்த இரவு நேர அனுபவங்களை வாழ்கையில மறக்கவே முடியாது. சில பேர் பயந்துட்டு எதுமே சொல்லாம போய்டுவாங்க. சில பேர் அடுத்த நாள் போன் பண்ணி ‘எனக்கு வேலைக்கு போக ஆசை’ன்னு சொல்லுவாங்க. நாங்க யாரையும் கட்டாயப்படுத்துறது இல்லை. அவங்க என்ன படிச்சிருந்தாலும், படிக்கலைனாலும் அவங்க ஆர்வத்துக்கு ஏத்த மாதிரியான வேலைக்கு அனுப்பி வைப்போம்.

சின்னச் சின்ன கம்பெனிகள் முதல் ஐ.டி. போன்ற பல பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் வரை எந்தெந்த நிறுவனங்கள் மூன்றாம் பாலினத்தவர்களை வேலைக்கு சேர்க்க விருப்பம் தெரிவிக்கிறாங்களோ, அவுங்களைத் தேடிப் பிடிச்சு அந்த நிறுவனத்தில் இருக்கக் கூடிய பணியின் தகுதிக்கும், தேவைகளுக்கும் ஏற்ப திருநங்கைகளைத் தயார் செய்து அனுப்பறோம். முதலில் அந்த நிறுவனத்தில் அவங்க அனுமதியோடு மூன்றாம் பாலினத்தவர்களைப் பணியிடங்களில், பொது இடங்களில் எப்படி நடத்தணும் போன்ற கலந்துரையாடல்களை நடத்துவோம். அவங்களைப் பணிக்கு அமர்த்துவதால் சமூகத்தில் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களைத் தெளிவாக விளக்கிச் சொல்வோம்.

மூன்றாம் பாலினத்தவர்களோடு பணியிட ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்கும் ஒரு நல்ல சூழலை உண்டாக்குவோம். இது மூலமா தான் திருநங்கை, தான் திருநம்பி என்ற அடையாளத்தை மறைத்து சமுதாயத்துக்கு பயந்து பல இடங்களில் இருக்கும் நிறைய பேர் தானாக வெளியே வருவாங்க. அப்போ அவங்கக்கிட்ட இருக்க திறமையும் சேர்ந்து வெளியே வரும். அப்படி அவங்க தைரியமா வெளிவந்த நிகழ்வுகளும் நடந்திருக்கு.

எப்படி நேர்காணலில் கலந்துக்கிட்டு பேசணும், கிடைச்ச வேலையை எப்படித் தக்கவைத்துக் கொள்ளணும், எப்படி இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கணும்னு திருநங்கைகளை மன ரீதியாக வலுப்படுத்தி, அவுங்களோட சுய ஆளுமைகள் திறமைகளை வெளியே கொண்டுவந்து வேலைக்கு அனுப்பறோம். இப்ப வரைக்கும் ஐந்து திருநங்கைகளுக்கு வேலைக் கிடைச்சிருக்கு. இப்போதைக்குச் சென்னையை மட்டும் தளமா வெச்சு செயல்படத் தொடங்கியிருக்கோம்.

அடுத்தடுத்து தமிழ்நாடு முழுக்க இந்தச் செயல் திட்டத்தைக் கொண்டு வரணும். குறுகிய காலத்துலேயே நல்ல பலன் கிடைச்சிருக்கு. எங்க அம்மாவும் கூடிய சீக்கிரம் பெரி ஃபரில சேர்ந்து வேலைப் பார்க்க போறாங்க” என்று பெரும் பயணத்துக்குண்டான ஆயத்த முனைப்போடு பேசுகிறார் PERI FERRY யின் க்ரியேட்டிவ் ஹெட்டும், புகைப்பட கலைஞருமான ஸ்டீவ்ஸ்.

“என்னோட 14 வயசுல இருந்துதான் நான் திருநங்கைன்னு உணர ஆரம்பிச்சேன். பல தடைகளையும் மீறி பொறியியல் பட்டம் முடிச்சிருக்கேன். எனக்கு என்னதான் கல்வித்தகுதிகள் இருந்தாலும் என்னோட புறத்தோற்றத்தை வச்சு கேம்பஸ் இன்டர்வியூல என்னை ரிஜெக்ட் பண்ணிருவாங்க. அரசு என்னதான் நலவாரியம், நலத்திட்டங்கள் கொடுத்தாலும் திருநங்கைகளுக்குச் சமூக அங்கீகாரம் கொடுக்கிறது இல்லை. நிறைய தனியார் அமைப்புகள் எங்களோட அடிப்படைத் தேவைகளை மட்டும்தான் பூர்த்தி செய்ய வாறாங்க. ஆனால், எங்களோட படிப்பு, தகுதிகள், திறமைகளைப் பார்த்து யாரு எங்களை வேலைக்குக் கூப்பிடுறாங்க?

அரசு வேலைகளுக்குப் போணும்னாலும் இன்னும் பல தடைகளைத் தாண்டித்தான் போக வேண்டியதா இருக்கு. ரொம்ப சொற்ப அளவுலதான் திருநங்கைகள் முன்னாடி போயிருக்காங்க. நண்பர்கள் மூலமா அறிமுகமான இந்த அமைப்பு எனக்கு மதிப்பும், பொறுப்பும் கொடுத்திருக்காங்க. வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கும் பல திருநங்கைகளின் சமூக அந்தஸ்துக்கு என்னால முடிஞ்ச களப்பணியை இந்த அமைப்பு மூலமா செஞ்சிக்கிட்டே இருப்பேன்” என்று உறுதியோடு சொல்லும் சென்னையைச் சேர்ந்த பரா PERI FERRY-யின் குழு மேலாளர் மட்டுமில்லை; பரதநாட்டிய கலைஞரும் கூட.

கவிதைகள், பாடல்கள், நடனங்கள், இசை, உணவு என்று முப்பாலினத்தவர்களும் ஒரே இடத்தில் கூடிக்கொண்டாடும் ஒரு கலைத் திருவிழாவை இந்த மாதம் 29ஆம் தேதி சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் PERI FERRY அமைப்பினர்.

“பொது சமூகமும் மூன்றாம் பாலினத்தவர்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் பேசி புரிந்துகொள்ள வேண்டும். பொதுதளத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நமக்குமிடையேதான் உரையாடல்கள் என்பதே இல்லையே. அந்த உரையாடலுக்குத்தான் இந்த 'திரு’ விழா” என்கிறார் நீலம்.

எழுத்து, சினிமா, அரசியல், கலை போன்ற துறைகளில் எண்ணிக்கையில் மிகக்குறைந்த மூன்றாம் பாலினர் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களின் பெயர்கள்கூடத் தெரியாத எண்ணற்ற திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் பல குக்கிராமங்களில், திருவிழாக்களில், பெருநகரத்து சாலைகளில், ரயில்களில் என்று பல இடங்களில் இக்கணம் வரை வதைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் பெரும் தேவைகள் என்னவாக இருந்திடப் போகிறது? நம்பிக்கையும், அரவணைப்பும், நல்ல வழிகாட்டல்களும் தரக்கூடிய தாழ்வாரங்களும், கேலி கிண்டல் இல்லாமல் இயல்பாய் பழகக்கூடிய மனிதர்களும்தான்.

‘எங்கள் ஆட்சிதான் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி’ என்று வாக்குறுதிகளின் கடைசி வாக்கியங்களாக இவர்களை வைத்திருக்கும் ஆட்சிகளைக் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், உணவு விடுதிகள், பொது கழிப்பிடங்கள், பின்னிரவுகள் என்று சனத்திரள்களின் ஒருநாள் பயணங்களில் கைக்காசைப் போட்டு அழைத்துக் கொண்டு போய் இவர்களது வாழ்க்கை முறையினைக் காட்ட வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு வாய்ப்புகள் கொடுத்துவிட்டால் மட்டுமே கடமைகளும், புரட்சி மாற்றங்களும் பூர்த்தியாகிவிட்டதாக எண்ணிவிடக் கூடாது. மூன்றாம் பாலினத்தவர்களை ஊடகங்கள் எவ்வாறு சித்திரிக்கின்றன என்பதில் தொடங்கி கல்வித்தளத்தின் ஆரம்பப் புள்ளியில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களும் சமூகத்தின் அங்கம் என்ற புரிதல்களை உருவாக்கிட வேண்டும்.

பெரி ஃபரி போன்ற நம்பிக்கைத் தாழ்வார படகில் ஏறும் நாம், எவ்வித தயக்கமுமின்றி அவமானங்களையும், கூச்சங்களையும், தடைகளையும் உடைத்து பயோடேட்டாக்களின் பாலின இடத்தில் ‘மூன்றாம் பாலினம்’ என்று மிடுக்காய் குறிப்பிடுவோம்.

கட்டுரையாளர் குறிப்பு: முத்துராசா குமார்

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் M.A, MPhil முடித்துள்ளார். விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர். இசை ஆல்பங்கள், குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார்.

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon