மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

தக்காளி கற்றுத் தரும் பாடம்!

தக்காளி கற்றுத் தரும் பாடம்!

பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை ஏறினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உதாரணமாக, வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியதால், அது ஆட்சியாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எனவேதான் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்து வருகின்றன.

இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தக்காளி விலை, தங்கம் போல் மேலும் மேலும் உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்றுள்ளது. மத்திய அரசு தக்காளி விலை குறைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தக்காளி விலை 100 ரூபாயைத் தொட்டுவிட்ட நிலையில் கொள்ளையர்களின் கவனம் தற்போது தக்காளியின் பக்கம் திரும்பியுள்ளது.

மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர் சாந்திலால் ஸ்ரீவத்சவ். இவர் தினமும் நவிமும்பை மார்க்கெட்டில் இருந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில், சாந்திலால் கடந்த வியாழக்கிழமை (20-07-2017) இரவு சுமார் 700 கிலோ அளவுக்கு தக்காளி வாங்கி வந்துள்ளார். எலி சேதப்படுத்தும் என்ற பயத்தில் கடைக்கு வெளியில் தக்காளி கிரேடுகளை இறக்கி வைத்துவிட்டு வந்தார்.

மறுநாள் காலை கடைக்குச் சென்று பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் முதல் நாள் வைத்திருந்த இடத்தில் தக்காளி இல்லை. அதற்கு பதில், தக்காளி மூட்டைகளில் செங்கற்களையும் குப்பையையும் அள்ளிவைத்து மூட்டைகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், திட்டமிட்டு தக்காளியை மொத்தமாக திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து சாந்திலால் கொடுத்த புகாரின்பேரில் தஹிசார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியைத் திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மார்க்கெட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததைத் தெரிந்துகொண்ட கும்பல் ஒன்று, தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்கும் நிலையில், மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக தக்காளியை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், மத்தியப்பிரதேச மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகள் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி திடுடப்படுவதாகச் சில தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து தக்காளி திருட்டைத் தடுக்க சில வியாபாரிகள் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.

அங்குள்ள மார்க்கெட்டில் தக்காளி திருடுபோகாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வியாபாரிகள் தனியார் பாதுகாவலர்களைப் பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளனர். இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோ அளவுக்குத் தக்காளிகள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

தற்போது தக்காளி விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்றால், தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை மிகவும் குறைவாகிவிடுகிறது. சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய்க்கு விற்றது. மேலும் தக்காளியின் ஏற்றுமதிக்கான வருமானம்கூட இல்லாதாதால் தக்காளியைப் பறித்து சாலைகளில் கொட்டியதும், பறிக்காமல் செடியிலேயே விட்ட அவலமும் நடைபெற்றது. தற்போதைய நிலையில் ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் தக்காளியின் விலை ஆப்பிளின் விலையைவிட அதிகமாக உள்ளது.

ஆனால், இந்த விலை வீழ்ச்சியையோ அல்லது ஏற்றத்தையோ முறைப்படுத்தக்கூடிய அமைப்பு நம் நாட்டில் இல்லை. இதை முறைப்படுத்த, நம்முடைய அரசாங்கங்கள் வீணாகும் தக்காளியைப் பதப்படுத்தி, ஊறுகாய், சாஸ் போன்ற பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதற்கென ஓர் அறிவிப்பை வெளியிட்டால் நிச்சயம் தக்காளியின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். தற்போது, தக்காளி விவசாயிகளின் நிலை, விலை உயர்ந்தால்கூட தக்காளியைப் போலவே தினமும் நசுங்கிக் கொண்டிருக்கிறது. தக்காளி போல நசுங்கும் விவசாயிகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் கண்டுகொள்ளுமா?

- ஆரோன்

சனி, 22 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon