மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

முகநூல் மூலமாக அறிமுகமாகும் நபர்கள் தற்போது ஏராளம். அவர்களில் சிலரின் பதிவுகள் வெகு அற்புதமாக இருக்கின்றன. சிலரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், அவர்களைப் பற்றி ஆதாரபூர்வமாக எதுவுமே தெரியாத நிலையில் நாம் அவர்களின் முகங்கள் அல்லது எழுத்துக்குப் பின்னிருக்கும் நம் யூகங்களை முன்வைத்து நாம் ஓர் உலகத்தை அவர்களுக்கு உருவாக்குகிறோம்.

மேலும், நட்பு தீவிரமாகும்போதோ அல்லது காதலாகும்போதோ இரண்டு விதங்களில் ஆபத்து ஏற்படும். ஒன்று உடல்ரீதியிலான வன்முறை. இரண்டாவது பொருளாதார ரீதியிலான பயன்பாடு. இதைத் தாண்டி நீடித்த காதலோ, உறவோ வெகு குறைவாகத்தான் வாய்த்திருக்கிறது.

சமீபக்காலத் திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் காதலர்கள் அவரவருக்கான முகநூல் பக்கத்தை மற்றவர் பார்த்துப் போகிறவர்களாக இருப்பது போன்ற காட்சி - அவர்கள் நகர்புறக் காதலர்களாக இருந்தால், நிச்சயம் இடம்பெறுகிறது. இப்படி அதிகம் அறிமுகம் இல்லாத உறவுகளைத்தான் நாம் திருமணம் என்னும் பெயரில் இணைத்துக் கொள்கிறோம். அதைக் கலாசாரம் என்று கொண்டாடுகிறோம். ஆனால், இதை நாம் கலாசாரச் சீரழிவு என்கிறோம். இரண்டுமே அதுதான் என்று சொல்ல, குரல் நம்மிடத்தில் இல்லை.

சென்ற வாரம் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் முகநூல் மூலம் பழகி காதலித்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓர் இளைஞரைச் சந்திக்க கிருஷ்ணகிரி வருகிறார். இரண்டு முழு நாள்கள் அவரை பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டிவிட்டு, பின்னர் பண்ருட்டியின் முந்திரிக்காடுகளில் வைத்து எரிக்க ஆரம்பிக்க, அப்பெண் தப்பி வந்து கிராம மக்களின் பாதுகாப்பில் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.

அவரை விசாரணை செய்த காவல்துறையினருக்கு அப்பெண் சரியான விவரங்கள் சொல்லவில்லை. அதன் காரணம், சம்பவம் வெளிப்படையாகி விடும் என்பதே. ஆனால், கொடுக்கப்பட்ட சிறிய விவரங்களிலேயே குற்றம் செய்தவரை கைது செய்தனர் கடலூர் எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர்.

இப்படி தெரியவரும் சம்பவங்கள் போகவும் தெரியவராமலேயே கரைந்து போகும் சம்பவங்கள் உண்டு. அதைப் பற்றி நம் ஊடகங்களுக்கு பெரிய அக்கறை கிடையாது. சமூக வலைதளங்களில் ஆயிரம் நட்புக் கோரிக்கைகள் காரணமில்லாமல் கொடுக்கப்படுகின்றன. மறைந்து கிடக்கும் கசடுகள் புரியாத பல விஷயங்களை மறைத்து வைக்கிறது.

நாங்கள் எல்லாம் சிறுவயதாயிருந்தபோது இப்படியெல்லாம் வீட்டை விட்டுப் போனதில்லை என்று சிலர் சொல்வதை சமீபத்தில் கேட்டேன். உலகமோ, மக்களோ திடீரென மாறி விடுவதில்லை. எல்லா நிகழ்வுகளும், எல்லா நல்லதும் கெட்டதும் காலாகாலமாக இருந்தே வந்திருக்கிறது.

காயத்ரி மிக அடக்கமான பெண் என்றுதான் எங்கள் நண்பர்கள் குழுவில் அறியப்பட்டிருந்தாள். ஆனால், அவள் கல்லூரிக்குப் போகும் முன்னால் காதலித்து ஒரு பேருந்து ஓட்டுநருடன் சென்று விட்டாள். சரியாய் மூன்று மாதங்கள் கழித்து திரும்பி வந்தாள். அவளது ஆச்சாரமான குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டது. ஆனால், மறுநாள் அவர்களின் வீட்டுக் கதவு திறக்கவில்லை. எலி மருந்து கலந்த உணவு சாப்பிட்டு சிறு குழந்தைகளுடன் இறந்து போகிறார்கள். அந்தக் காட்சி இன்னமும் மனதில் இருக்கிறது.

என்ன தவறு செய்தார்கள்.அவர்கள்? என்ன தவறு செய்தாள் காயத்ரி? அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆனப் பிறகும் இன்னமும் இந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. ஆனால், இந்த சமூகம் தினமும் இதுபோன்ற போலியான ஒழுக்கக்கட்டுக்களுடன் கட்டுக்களை கட்டமைக்காமல் கட்டுடடைத்தபடியே இருக்கிறது.

தனக்கு முகநூலில் அறிமுகமாகி இரண்டு நாள்கள் கூட இருந்து பின் முந்திரி தோட்டத்தில் எரிக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நபரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? ஆனால், பெரும்பாலான ஆலோசனைகள், அக்கறை என்னும் பெயரில் அப்பெண்ணைச் சுற்றியே இருந்திருக்கும். அதனாலேயே அப்பெண் தன்னை எரித்தது யார் என்று சொல்லாமல் இருந்திருக்கும். நல்லவேளையாக நானே என்னை எரித்துக் கொண்டேன் என்று சொல்லாமல் இருந்தாரே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சேலத்தில் ஒரு பெண்ணை பாலியியல் வன்முறைக்கு ஆளான மூன்று பேர் சிறிது காலத்தில் விடுதலைக்கூட செய்யப்படலாம். ஆட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒருவிதமான மந்தத்தன்மையுடன் கூடிய அதிகாரம் மட்டுமே நிலவுகிறது. எடப்பாடி என்ன சாதித்தார் என்று இருபது வருடங்களுக்குப் பிறகு கேள்வி கேட்கப்பட்டால் அவர் உயிருடன் இருக்கும்பட்சம், அவருக்கே பதில் தெரிந்திருக்காது. பண்ருட்டியில் இப்படி ஒரு பெண்ணை எரிக்கும் சம்பவம் நடைபெறும்போது நேர்மையான காவல் அதிகாரிகள் மட்டும் இல்லையென்றால் குற்றவாளி பிடிபடாமல்கூட போயிருக்கலாம்.

காயத்ரிகள் காதலித்ததுதான் தவறா? இல்லை - யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் காதலித்த பையனோடு போய் வந்தாளா? நமது சமூக ஒழுக்க கோட்பாடுகள் முதலில் மாறினால் அன்றி காயத்ரிகளோ அல்லது பண்ருட்டியில் எரிக்கப்பட்ட பெண்ணோ மாற போவதில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்கு சமூக ஆர்வலர்கள் மிக முக்கியமான அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு பிக் பாஸை எதிர்ப்பதிலேயே பாதி நேரம் செலவாகிறது. இதை துரதிர்ஷ்டம் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தையில்லை. ஆனால், இது விரைவில் அல்லது வெகு விரைவில் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லை.

ஏன் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் கேட்டால் கீழுள்ள மின்னஞ்சல்தான் காரணம்.

வணக்கம். என் பெயர் விவேகானந்தன். மின்னம்பலத்தில் உங்கள் கட்டுரைகள் எல்லாமே பெண்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு இருக்கின்றன. நானும் ஐந்து பெண்களுடன் பிறந்த மூத்த சகோதரன் தான். ஆனால், பெண் உலகம் அத்தனை நல்ல உலகம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அவர்கள் எல்லோருமே என் சகோதரிகள்தான். ஆனால், அவர்களில் இரண்டு பேரின் நடவடிக்கைகளால் என் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இருவரில் ஒருத்தி, எங்களைவிட கீழ்சாதி பையனைத் திருமணம் செய்தாள். ஒருத்தியோ, கல்லூரி படிக்கும்போதே ஒருவனுடன் போனாள். ஆனால், அவனால் ஏமாற்றப்பட்டு இப்போது திரும்பி வந்து வீட்டில் இருக்கிறாள்.

நானும் பெயருக்கு ஏற்றமாதிரி பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன். கூட இருக்கும் ஆணைப் பற்றி பெண்கள் நினைப்பதேயில்லை. உங்களைப் போல எழுத்தாளர்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்கினால் பாதிக்கப்படப் போவது இன்னும் என்னைப்போன்ற ஆண்களே. இப்படி யாரும் உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை.

-----

நல்லவேளை சகோதரா அன்புடன் என்று நீங்கள் கடிதத்தை முடிக்கவில்லை. உங்கள் வேதனைக்கும் ஏமாற்றத்துக்கும் உங்கள் சகோதரிகளைக் காரணம் சொல்லாமல் வீட்டிலிருக்கும் அந்தச் சகோதரியின் மனநிலையைப் புரிந்துகொள்ளுங்கள். அவரை வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள். அவர் தங்க விடுதிகள் கிடைக்கும். அவர் வீட்டிலிருப்பதுதான் உங்கள் திருமணத்துக்குப் பிரச்னை என்றால் அதைத் தீர்க்க, இருபுறமும் காயங்களின்றி, வழிகளுண்டு. உங்கள் மின்னஞ்சலில் கீழ்சாதி என்றொரு வார்த்தை உபயோகப்படுத்தியிருந்தீர்கள். என்னாலேயும் அன்புடன் என்று உங்களை அழைக்க இயலவில்லை.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 -தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

புதன், 19 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon