மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

சமீபத்திய ஜி.எஸ்.டி. ஜுரத்தில் செய்திதாள்களில் இன்னுமொரு செய்தி ஒளிந்துகொண்டது. அது, கேரள நடிகர் திலீப் ஒரு நடிகரை பாலியியல் வன்முறைக்கு ஆளாக்கின வழக்கில் சிக்கிக்கொண்டது. பாலியியல் வன்முறை செய்த நபர் திலீப்பின் படப்பிடிப்பு தளங்களில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் கடையில் சோதனை நடந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் பாலியியல் வன்முறை நடைப்பெற்றபோது எடுத்த புகைப்படங்களை அங்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வளவுக்கும் காரணம் என்ன? திலீப்புக்கும் காவ்யாவுக்கும் ஏற்பட்ட காதலைப் பாலியியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட நடிகர் திலீப்பின் முதல் மனைவியான மஞ்சு வாரியரிடம் சொல்லி விட்டதுதான் என செய்திகள் சொல்கின்றன. இன்றிருக்கும் வெற்று இடைவெளிகளில் உலவும் உறவுகளில் இதுபோல மாற்று உறவுகள் மிக எளிதாக அமைகிறது. ஆனால், அதை ஒப்புக்கொள்ளும் மன நிலையோ சமூக கட்டமைப்போ இங்கு ஏற்படவில்லை.

அதனாலேயே அதை மறைத்து மறைத்து பின் அவ்விஷயம் தெரிய வரும்போது அதை மறைக்க பல குற்றங்கள் நிகழ்கின்றன. திலீப், காவ்யா தாங்கள் காதலித்ததாக திருமணம் செய்தபோதும் தெரிவிக்கவில்லை. தன்னால் பாதிக்கப்பட்ட காவ்யாவுக்கு வாழ்வு கொடுப்பதாக திலீப் கல்யாண சட்டை கசங்குவதற்கு முன் பேட்டி கொடுத்தார். இப்படியான வாழ்வு கொடுக்கும் தியாயங்களின் பின்னிருக்கும் பொய்கள் மிக எளிதாக எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடியது. திலீப் – மஞ்சு - காவ்யா சம்பந்தப்பட்ட காதலும் காதலின்மையும்தான். இதைப் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒரு நடிகரை பாலியியல் வன்முறைக்கு ஆளாக்குவதன் மூலம் பழி தீர்ப்பதென்பது ஆகச் சிறந்த கோழைத்தனம். நினைத்துக்கூடப் பார்க்க இயலாத விதத்தில் உறவு சிக்கலை வன்முறையாக்கும் இழிச்செயலுக்கு இன்னொரு பெண்ணும் மறைமுகமாக வழி செய்திருக்கிறார் என்பது மிக வேதனையளிக்கிறது.

இந்தச் சமூகம் முதலில் திருமண உறவுகள் மீறிய உறவுகளை ஏற்க வேண்டும். அதை ஏற்பதன் மூலம் ஏற்படும் புரிதலில்தான் அச்சிக்கல்கள் தீர்க்கப்படும். இல்லையேல் நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் ‘உல்லாசத்தில் கள்ளக் காதலர்கள்’ என்று அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், அதற்கு யாருமே தயாராக இல்லை. குற்றமென கருதி புறந்தள்ளுதலின் மூலம் அவமானப்படுத்துவதன் மூலம் நிகழும் நியாயங்கள் மாயையாகவே முடிந்து போகிறது.

நம் தமிழ்ச் சமூகத்தில் சிந்து பைரவியும் முதல் மரியாதையும் வசூல் சாதனை செய்த காலம். எனக்கு பதின்ம வயது. இப்படிப்பட்ட உறவுகள் தவறென நினைத்த காலம். சிந்து பைரவிக்கு மாற்றாக முற்பகம் ராஜ்ஜியம் என்னும் தொடர்கதையும் ஜுவாலைகள் என்னும் குறுநாவலும் இதை எழுதும் நானே எழுதியிருக்கிறேன். ஆனால், காலம் அனுபவங்களின் மூலம் யதார்த்தத்தை புரிய வைத்தது.

திருமணம் என்பது வெறுமனே முதலிரவு முடிந்து தினமும் இட்லி, சாம்பார் சாப்பிட்டு, பிள்ளை பெறும் விளையாட்டு இல்லை. இருமனங்கள் ஒன்று சேரும், மதிப்பும் மரியாதையும் காதலும் நேசமும் பகிரும் வெளி. அதில் எங்கோ இற்று போகும்போது வேறொரு மனம் வீசும் மூச்சுக் காற்றில் மனம் பொதிந்து கொள்கிறது.

என் சிநேகிதி ஒருவர் இயல்பாக அவருடன் பணியாற்றிய ஒருவர் மீது காதல் கொள்ளும்போது இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்தன. இருவரும் விளையாட்டு மனம் கொண்டவர்களும் அல்ல. மனம் நிலைக்கொள்ளாமல் யோசித்தபோது இருவருக்கும் ஒருவரை ஒருவரை நாடும், தேடும் ஏதோ ஒன்று சமூக கட்டுக்கள் மீறி மனித இயல்பின் மிச்சமாய் மீதியிருக்கிறது. பின்னர் சம்பந்தப்பட்டவரின் மனைவியோடு இருவரும் உட்கார்ந்து பேசி அவர்களுள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அது என்னவென்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இல்லையென்றும் இருக்கக் கூடாதென்றும் நாம் நிர்ணயிக்கும் உறவுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவையெல்லாமே இயல்பானது என்று ஒதுக்கினாலும் அதற்குப் பிறகு அதில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மேல் நிகழ்த்தும் பாலியியல் வக்கிரங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சம்பந்தப்பட்ட நடிகரை அதன்பின் அவர் காதலர் திருமணம் செய்து கொண்டதும் கேரளக் காவல்துறை திலீப்பின் பிரபலத்தைக் கருதாமல் குற்றத்தை நேர்மையாக விசாரிப்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள்.

ஒரு காரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியியல் வன்முறை புகைப்படங்கள் எடுத்து பின் அவரை இறக்கி விட்டவர்கள் இந்த சமூகத்தில் சாதாரணமாக நடமாட சட்டம் விடாதிருத்தல் நலம். காவ்யா மாதவனின் அம்மாவும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பது இறுதியான தகவல். சமீபத்தில் இப்படி திருமணத்தன்று பாலியியல் வன்முறைக்கு ஆளான பெண் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். கத்தி குத்துக்களோடு தப்பிய அப்பெண்ணை அதே மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வந்த புகையில் பின்பொரு நாளில் அவர் இறக்கிறார். பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இன்னொரு காதல் அவர் வாழ்வில் வருகிறது. பாலியியல் வன்முறையால் குழந்தை பிறக்காத அளவுக்குக் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்ன மருத்துவ அறிக்கை பொய்த்துப் போகுமாறு இன்று அவருக்கு இரண்டு குழந்தைகள்.

வாழ்க்கையில் இன்னொரு உயிரை வதைக்காமல் இருப்பதன் தன்மை நம் கல்வி முறைகளில் உட்புகுத்தப்பட வேண்டும்.

அன்புள்ள தமயந்தி...

காசிராஜன் எழுதுவது. என் பெயரை தாராளமாக நீங்கள் வெளியிடலாம். இன்று ஆயிரக்கணக்கில் பெண்களுக்கு எதிரான பாலியியல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், சிறு வயதிலிருந்தே விடுதிகளில் இருந்து படித்த எனக்கு, ஓரினச் சேர்க்கை வன்முறை பல வருடங்களாக நிகழ்ந்திருக்கிறது. தாங்க முடியா துயரம். யாரிடமும் வெளிப்படுத்த முடியாத குடும்ப சூழல்.

விடுதியில் இருந்து நாம் வெளிவரலாம். காயங்களிலிருந்து அல்ல. என் மனைவியிடம் உண்மையைச் சொன்னேன். அவள் என் பொக்கிஷம். அதைப் புரிந்துகொண்டு இன்னும் என் மனம் கோணா சிநேகிதியாய் இருக்கிறாள். மகிழ்ச்சியான தாம்பத்யம் இரு குழந்தைகளாய் மலர்ந்திருக்கிறது.

என் கோரிக்கை என்னவெனில் ஆண்கள் பாலியியல் வன்முறைக்கு ஆளாவது பற்றி அவ்வளவாக நம் தமிழ் சூழலில் யாரும் பேசுவது இல்லை. எழுதுவதும் இல்லை. ஆண்கள், குறிப்பாக சிறு வயதில் பாலியியல் வன்முறைக்கு ஆளாவது முதலில் உறுதிப்படுத்தப்பட்டு அப்படி பாதிக்கப்பட்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நன்றி காசி. திறந்துவிடும் மனமே முக்கியம். சாவிகள் தானாக பூட்டுக்களைத் திறக்க ஆரம்பிக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

புதன், 12 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon