மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: உடைதலில் மிளிரும் பசித்த மானிடம்!

சிறப்புக் கட்டுரை: உடைதலில் மிளிரும் பசித்த மானிடம்!

தமிழில் ஒரே ஒரு நாவல் எழுதி வாசகர்களின் கவனத்தை திருப்பியவர்கள் சிலருண்டு. அவற்றுள் உதயணின் `நடைபாதை’ ,காசியப்பனின் `அசடு’ என்ற வரிசையில் கரிச்சான்குஞ்சுவின் `பசித்த மானிடம்’ நாவலும் முக்கிய பங்காற்றுகின்றது. தொழில் நுட்பங்கள் பல்கி பெருகி விட்ட காலச்சூழலில் எவரும் எதுகுறித்தும் தற்போது பேசலாம் எழுதலாம். ஆனால் 1980-களில் நவீனம் தொடங்கிய காலகட்டத்திலும் மரபுசார் நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுற்ற நிலையிலும் மனிதனின் காமம் சார்ந்த இச்சைகளைப் பற்றி பேசுவதென்பது சற்று சிந்தித்தற்குரியது. அந்தவகையில், 1920-50 காலகட்டங்களை நாவலின் பின்னணியாகக் கொண்டு எழுதி, தமிழில் சொல்லத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஆர்.நாராயணசாமி என்னும் இயற்பெயர் கொண்ட கரிச்சான்குஞ்சு. இன்று (ஜூலை 10) அவரது 98வது (1919-1992) பிறந்ததினம்.

1978 ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட இந்நாவலானது அக்காலகட்டத்தில் பரவலாக பேசப்படாவிட்டாலும் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனின் குரூரக் காமஇச்சை குறித்து எழுதப்பட்ட படைப்பு என்ற அடிப்படையில் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்நாவலானது பல்வேறு முடிச்சுகளை முன்னுக்குப் பின் முரணாகவும் சமூகத்தில் உயர்சாதியினரும் அந்தஸ்துடையோரும் செய்யும் காமப்பசியினை மையமிட்டதோடு ஆன்மீக அனுபவங்களையும், தமிழ் கலாச்சார சரித்திரத்தில் அதன் இலக்கிய தத்துவார்த்த மரபில் வேர்கொண்டு கிடக்கும் மெய்ஞானத்தை மறைபிரதியாக இந்நாவல் தன்னகத்தே கொண்டு பயணிக்கிறது.

பாலியல் உறவுகள் குறித்து சமூகத்தில் எழுதப்படாத விதிகள் வெறும் வேஷமாக இருப்பது பெரிய விஷயம் இல்லைதான். ஆனாலும் கணேசனை பள்ளிப்பருவத்திலேயே ராவுத்தர் உறவுகொள்ளும் போதும், அது அலுத்துப் போகும்போது வேறு ஒருவனிடம் போவது, அவன் எப்படா தொடுவான்.. எப்ப படுக்கலாம் என்று ஏங்கிக் கிடக்கும் மனம். தஞ்சை பிராமணப் பையனுக்கு இப்படி நடந்ததா? என்பதை விட எந்தவிதமான நேசித்தலும் இல்லாமல் நேராகப் படுக்கைக்கு அழைக்கும் ஆண் பெண் சித்திரங்கள் எல்லாம் வாசகனின் பிம்பங்களின் எண்ணங்களை அலட்சியமாக உடைக்கும். ஒரு விதத்தில் எனக்கு எழுத்தாளர் ஜி.நாகராஜனை நினைவுப்படுத்தினாலும், ஜி.என்னின் உலகம் விபச்சாரிகளும் விபச்சார புரோக்கர்களும் ரவுடிகளும் நிறைந்தது.விபச்சாரிகள் நேராகப் படுக்கைக்கு போவதைவிட தஞ்சாவூர் பிராமணப் பின்புலத்தில் இது நடப்பது பிராமணப் பிம்பங்களை இன்னும் சல்லி சல்லியாக உடைக்கிறது.

ஒப்பனைகள் துறந்த அனுபவம், திரை விலகிய உண்மை ஆகியவை ஒருபுறம் இருக்க, கரிச்சான் குஞ்சு காட்டும் அக்கிரகாரமும் கும்பகோணமும் தம்மளவிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தோன்றுகிறது. இந்நாவலில் வருகின்ற கணேசன் காம இச்சைகளில் தன்னை தோய்த்துக் கொண்டு குஷ்டரோகியாக உருக்கொள்கிறான். தீவிரமான நோயில் சிக்குண்டு திருச்சி ரயில்வே ஸ்டேசனில் தஞ்சம் கொள்கிறான். அப்போது அங்கு பசுபதி என்ற போலீஸ் அவனைப் பார்க்கிறார். இருவருக்குமான உரையாடல் தொடர்கிறது. இந்த ஊருக்கு நான் புதியவன், பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன்என்கிறான் கணேசன். பசுபதி தீவிர ஆன்மீகவாதியாக, எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வரமுடியும்எனச் சொல்ல, அதற்கு கணேசன், அப்படி கிடையாது. நான் ஒரு அழுகல்.எச்சிக்கல நாய். மலம் மகிழும் பன்றி. நான் முன்பெல்லாம் நல்லா இருப்பேன் . அந்த உடம்பு செத்துப் போயிடுச்சு. இது புது உடம்பு என்று எதார்த்தமாய் சொல்லும் வார்த்தைகளை பசுபதி தத்துவார்த்தமாய் எடுத்துக் கொண்டு வியந்து வணங்கும் காட்சிகள் எள்ளல் இழிவுச் சுவையின் உச்சமாகக் கொள்ளலாம்.

சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்ட அனைத்து பிம்பங்களையும் அடித்து நொறுக்குவதில் படைப்பாளியின் தனித்துவமானது மறைந்திருப்பதாகக் கருத முடிகிறது. இருப்பினும் முன் ஜென்ம பாவ தோஷங்களை நம்ப வைக்க முயற்சிப்பது, கணேசன் எனும் பாத்திரம் தன் உடலை மறத்தல்; லௌகீக வாழ்வில் பயணிக்கும் கிட்டாவின் இறுதிகட்ட மனநிலை என பல்வேறு நிலைகளில் இந்திய மெய்ஞான முறையினை மீண்டும் மீண்டும் ஆழ்மனத்தில் பதிய வைக்கும் முயற்சியாக இந்நாவல் இருக்குமோ என்ற ஐயத்தினை விதைக்கிறது.

எவ்வாறு இருப்பினும் வயிற்றுப் பசி,அதிகாரப் பசி, காமப்பசி என பலவிதமான பசிகளின் உந்துதலால் செலுத்தப்படும் மானுட வாழ்வானது கடைசியில் எதில் நிறைவடைகிறது என்ற கேள்வியை நோக்கிச் செல்வது இந்நாவலின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அதே சமயத்தில் நவீனமாகிவரும் ஒரு சமூகத்தின் தடுமாற்றங்களைத் தயவு தாட்சண்யமின்றி பதிவு செய்யும் பிரதிகளில் ஒன்றாகவும் இந்நாவல் விளங்குகிறது. வாழ்வின் அர்த்தமின்மையைத் தத்துவத்தின் வெளிச்சத்தில் அல்லாது வாழ்வனுபவங்களினூடாக ஸ்பரிசிக்க முயல்கிறது கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம்.

மேலும் இவர் நாவல் மட்டுமல்லாது 160 க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். அக்கதைகளில் சிலவற்றை தேர்ந்து எடுத்து `எது நிற்கும்’ என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. நாவல், கதை, கட்டுரை என பல புதிய படைப்புகள் வந்தாலும் எக்காலத்திற்கும் கரிச்சான் குஞ்சுவின் படைப்புகள் நிலைத்திருக்கும் என்பது பலரும் அறிந்த நிதர்சனம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஆ.சந்திர சேகர், கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராய் பணிபுரிகிறார். நவீன இலக்கியங்கள் குறித்து தொடர்ச்சியாக வாசித்து வரும் இவர். கதை,கவிதை, கட்டுரை என தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 10 ஜூலை 2017