மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: திறந்து கிடக்கும் தமிழ்நாடு! நெருங்கும் ஐ.எஸ். அபாயம்!

சிறப்புக் கட்டுரை:  திறந்து கிடக்கும் தமிழ்நாடு!  நெருங்கும் ஐ.எஸ். அபாயம்!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆன கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டின் ஆட்சி சக்கரத்தினுடைய வேகம் மெள்ளக் குறையத் தொடங்கியது. அப்போலோவின் மருத்துவ அறிக்கைகள், சி.ஆர்.சரஸ்வதிகளின் இட்லி, தயிர்சாத அறிக்கைகளுக்கு இடையே தமிழகத்தின் நிர்வாகப் பல்சக்கரம் மழுங்கத் தொடங்கியது.

டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார் என்று அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை ஆட்சி சக்கரத்தின் அநேக இடங்களில் பழுது ஏற்பட்டு நிர்வாக இயந்திரம் துருப்பிடித்து துவண்டு கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் தலைமைக் கருவூலத்தில் இருந்து மாவட்ட கருவூலங்களுக்குப் பணம் போவதும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் மட்டும்தான் ஆட்சி என்றால் அந்த ஆட்சிக்கு இப்போது தடையில்லை. ஆனால், ஆட்சி என்பது அதையும் தாண்டியது.

தெர்மாகோல் செல்லூர் ராஜ், அழுகல் தக்காளி ராஜேந்திர பாலாஜி என்று அமைச்சர்களும், ஓ.பன்னீர், தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசு, ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட பலரும் மீம்ஸ்களுக்கு தீனியாகி வருகிறார்கள். இந்தக் கேலிகளுக்கு நடுவே தமிழ்நாட்டின் பாதுகாப்பு என்ற மிகப்பெரும் அடிப்படை அச்சாணியை பலரும் இங்கே மறந்துவிட்டோம்.

சில நாள்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் க்யூ பிராஞ்ச் போலீஸிடமிருந்து ஓர் சுற்றறிக்கை சென்றிருக்கிறது.

‘தமிழகத்தில் அதிக அளவில் பொது மக்கள் கூடும் இடங்கள், கோயில் திருவிழாக்கள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், கடைவீதிகள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்த உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டுள்ளது. லண்டனில் சமீபத்தில் நடந்த டிரக் தாக்குதலைப் போல இந்தத் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, உங்களது மாவட்டங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் போதிய அளவு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை உறுதி செய்யுங்கள். சோதனைகளை கடுமையாக்குங்கள். கண்காணிப்புகளை தீவிரப்படுத்துங்கள்’ என்கிறது அந்தச் சுற்றறிக்கை.

தமிழ்நாடு அரசு என்பது வெறும் குடிமையியல் நிர்வாகப் பணிகளை கவனிப்பது மட்டுமல்ல. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலம் என்ற வகையில் தமிழகத்தின் தெற்கு எல்லை இந்தியாவின் எல்லையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த எட்டு, ஒன்பது மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க ஒரு தலைவரின் பிடியில் தமிழக அரசு இல்லை என்ற துரதிர்ஷ்டவசமான நிலைமையின் அபாய கட்டம்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கவனம் தமிழகத்தின்மீது படியும் அளவுக்கு போயிருக்கிறது.

நேர்மையான, மனசாட்சியுடன் கடமையாற்றும் துடிப்புமிக்க சில காவல் அதிகாரிகள் நம்மிடம் வேதனையுடன் பேசிய தகவல்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

“தமிழ்நாடு அரசியல் என்பது நாள்தோறும் தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஆயிரம் நுட்பங்களும், நுணுக்கங்களும் கொண்டது. தமிழகத்தின் எல்லை என்பது இந்தியாவின் எல்லையும்கூட. எனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பாதுகாப்பு என்பது தேசத்தோடு சம்பந்தப்பட்டது.

ஒவ்வொரு நாளும் மாநில உளவுத்துறையிடம் இருந்து அந்தந்த நாள்களில் திரட்டிய அறிக்கை அன்று மாலை காவல்துறை தலைமையகத்துக்கு, டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தத் தகவல்களின் தீவிரத்தைப் பொறுத்து அன்று இரவே தமிழக முதல்வருக்கு அந்த தகவல்களின் தொகுப்பை டி.ஜி.பி. அனுப்பி வைப்பார். இதுதான் உளவு நிர்வாகத்தின் அன்றாட நடைமுறை.

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முதல்வராக இருக்கும் வரையில் உளவுத்துறைக்கும், காவல்துறை தலைமைக்கும் ஒவ்வொரு நாளும் பதற்றமாக இருக்கும். சி.எம். என்ன கேட்கப் போகிறாரோ… என்ன திட்டப் போகிறாரோ என்பதுதான் அவர்களின் பதற்றத்துக்குக் காரணம். போலீஸார் சொல்லும் தகவல்களுக்கு ஆயிரம் விளக்கம் கேட்பார் கருணாநிதி. ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு போலீஸ் அதிகாரிகள் திணறுவார்கள். எனவே அந்த ஆளுமைகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப அவர்களின் உழைப்பும், கண்காணிப்பும், தகவல் சேகரிப்பும் இருக்கும்.

ஆனால், கடந்த சில மாதங்களாக போலீஸுக்கு இந்தப் பயம் இல்லை. ஆட்சியாளர்களைத் தாண்டி மிக உன்னதமான கடமைமிக்கவர்கள்தான் போலீஸ் அதிகாரிகள். ஆனால், இப்போது ஆட்சியாளர்களின் கவனம் எல்லாம் நாட்டின் பாதுகாப்பிலோ, மிக கூரிய விஷயங்களிலோ இல்லை என்பதே போலீஸாரின் பயமின்மைக்குக் காரணம்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான தமிழகத்தின் நிலையைப் பயன்படுத்திதான் ஐ.எஸ். அமைப்பு தமிழகத்தைத் தன் பாய்ச்சலுக்கு பலியாக்கக் காய் நகர்த்திவருகிறது. லண்டனில் மக்கள் கூட்டத்தினிடையே டிரக் அல்லது வேனை புகுத்தி தாக்குதல் நடத்தியதைப் போல, தமிழகத்திலும் செய்ய இருக்கிறார்கள் என்றும் அதற்காக தமிழகத்தில் டிரக்கை திருடவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன.

சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் பல சம்பவங்களால் இந்தியாவைக் குறிவைத்திருக்கும் ஐ.எஸ், இந்தியாவிலேயே இப்போதைக்குத் திறந்த மாநிலமாக கருதுவது தமிழகத்தைதான்.

கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாள்கள் முன்பு டெல்லியில் இருந்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் ஹரியானா மாநிலத்திலுள்ள தங்களின் சொந்தக் கிராமத்துக்கு செல்ல ரயில் ஏறினார்கள். இடையில் அந்த ரயிலில் ஏறிய கும்பல் ஒன்று அவர்கள் மாட்டுக்கறி வைத்திருப்பதாக சொல்லி தாக்கத் தொடங்கியது. துரத்தித் துரத்தி கத்தியால் அந்தக் கும்பல் குத்தியதில் ஜுனைத் என்ற 16 வயது இளைஞன் கொல்லப்பட்டான். இது சமூக வலைதளங்களில் கடுமையாக பரவியது.

‘இனிமேல் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் மீது முஸ்லிம்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டும். அழுது கேட்கிறேன் ஹாபிஸ் ஜுனைதினை கொலை செய்தவர்களை இறைவா அழித்து நாசமாக்குவாயாக’ என்றும்… தமிழக அதிமுக தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து சொன்னதைக் குறிப்பிட்டு… ‘அம்மாவின் ஆணையை மீறி ரத்த வாடை அடிக்கும் பாஜக-வை ஆதரிக்கும் எவனுடைய வாழ்த்தும் இஸ்லாமியர்களுக்கு தேவையில்லை’ என்றும் சமூக தளங்களில் கருத்துப்படங்கள் பரவின. இதன் பின்னால் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே அரபி மற்றும் ரஷ்ய மொழியினையே பெரும்பாலும் பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் தமிழ் மொழியினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் இப்போது கிடைத்துள்ளது.

இன்னும் இதில் அதிர்ச்சி என்ன வென்றால்… தமிழகத்தில் ஐ.எஸ். தாக்குதல் திட்டத்துக்கு இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்பதுதான்.

ஏற்கனவே கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. 2009-க்குப் பின் தென்னிலங்கையிலும் முஸ்லிம்கள்மீது பௌத்த மத அடிப்படைவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டன. சில நாள்களுக்கு முன் கொழும்பு அகதிகள் முகாமில் மியன்மாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளானார். இதைச் சொல்லிச்சொல்லி இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களை ஐ.எஸ். இயக்கம் தங்களது வலையில் வீழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே புலிகளுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களைத் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் நிகழ்த்த கருவியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஐ.எஸ். இதெல்லாம் மத்திய அரசுக்கும் நன்றாகவே தெரியும். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசின் உறுதியான ஆதரவுக்கரமும் தேவைப்படுகிறது. அதை மத்திய அரசு தரும் பட்சத்தில் தமிழகத்தைக் காப்பாற்றலாம்” என்றனர் அந்த போலீஸ் அதிகாரிகள்.

கோட்டையில் எந்த அமைச்சர், எந்த அதிகாரியைப் பார்த்தாலும், “என்ன சார்... குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி இருக்காதுன்னு சொல்றாங்களே… அப்படியா?” என்றே விசாரிக்கின்றனர். தன் அரசின் ஸ்திரம் பற்றி எந்த கவலையும் இல்லாத முதல்வரால்தான் ஏழரை கோடி மக்களைக்கொண்ட திறந்த கடல் எல்லை கொண்ட தமிழ்நாட்டின் பாதுகாப்பு பற்றி சமரசமில்லாத அக்கறை செலுத்த முடியும். ஆனால், இப்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழல் அப்படி இல்லை என்பதுதான் உண்மை.

அரசியல் மாச்சரியங்களுக்கு ஒருபக்கம் நேரம் ஒதுக்கிக் கொண்டிருந்தாலும்… நம் மாநிலத்தின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதை ஆட்சியாளர்களும், அவர்களின்கீழ் பணிபுரியும் காவல்துறை உயரதிகாரிகளும் உணரவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதைத் தடுத்திட முடியாது. இந்த எச்சரிக்கை மணியை இப்போது ஓங்கி ஒலிக்க வேண்டியிருக்கிறது.

ஞாயிறு, 2 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon