மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

பத்துக்கொத்து!

 பத்துக்கொத்து!

ஸ்ரீரங்கம் கோயின் நிர்வாகம் ராமானுஜர் கைக்கு கிடைத்ததோடு… அதனால், வைணவர்களின் மிக உன்னதமான திரட்டான ராமானுஜ நூற்றந்தாதியும் நமக்குக் கிடைத்தது.

இன்றும் வைணவர்களிடையே ராமானுஜ நூற்றந்தாதிக்கு மிகப் பெரிய மதிப்பு உண்டு. ஸ்ரீரங்கம் பெருமாளே… தான் ஒருமுறை புறப்பாடு ஆகும்போது ராமானுஜரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ராமானுஜ நூற்றந்தாதியை கேட்டு மகிழ்ந்தாராம்

ராமானுஜரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகத்துக்குள் ஸ்ரீரங்கம் கோயில் வந்தபிறகு கோயிலில் சீர்திருத்தங்கள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டன.

முதலில் ராமானுஜர் அமர்ந்து கோயிலில் என்னென்னெ விதமான வேலைகள் இருக்கின்றன. அதை யார் யார் செய்ய வேண்டும் என்ற வகைப்பாட்டை ஏற்படுத்தினார்.

திருவீதிதோறும் சரியாக இருக்கிறதா என்று ஆராயும் தலையாரிகள், வீதிகளை செப்பனிடுவோர், குளத்தங்கரைகளை சரியாக பராமரிப்போர், காவிரியின் கரை காக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர், சுற்றுக் கோயில்களை செப்பனிடுவோர், கோயிலுக்கான நகை வேலை செய்யும் பொன், வெள்ளி, தாமிர பத்தர்கள், , சந்நிதிக்கும் மடப்பள்ளிக்கும் தேவையான பானைகளை வனையும் குயவர்கள், தேர், முதலானவற்றை சீர் செய்யும் தச்சர்கள், மண்டபங்களுக்கு தேவைப்படும் கல் தூண்களை செதுக்கும் கல் தச்சர்கள், கோயிலில் ஓவியங்கள் வரையும் ஓவியர்கள், பெருமாளுக்கும் மற்ற அனைத்து விக்ரகங்களுக்கும் துணி நெய்யும் நெசவாளர்கள், துணியை துவைக்கும் வண்ணார்கள், கோயிலுக்குத் தேவையான பல சரக்குப் பொருட்களை கொண்டுவரும் செட்டியார்மார்கள், கோயிலுக்கு பால், தயிர் ஆகியவற்றை தினந்தோ/றும் வழங்கும் கோபாலர்கள், கோயிலில் நாட்டியம் ஆடும் பெண்கள், அவர்களுக்கு நட்டுவாங்கம் கூறும் நட்டுவாங்கக்காரர்கள், நெசவாளர்கள் நெய்து கொடுக்கும் துணிகளில் கரை (பார்டர்) கட்டுபவர்கள்….

கோயிலை மையமாக வைத்து நடைபெறும் இத்தனை தொழில்களையும், அதில் ஈடுபட்டிருப்பவர்களையும், அதற்கு என்ன செலவு என்பதையும் ஆராய்ந்தார் ராமானுஜர்.

இவர்களுக்கான தேவைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அவர்களையே கூட்டி கோயிலின் தரம் மேம்பட ஆலோசனை நடத்தினார் ராமானுஜர். அதற்கு முன் இவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கோயிலுக்கு வந்ததே இல்லை. ராமானுஜரின் நிர்வாகத் திறமையைக் கண்டு அவர்கள் போற்றினர்.

ராமானுஜரின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பேசப்படுவது ஸ்ரீரங்கம் கோயிலில் பத்துக் கொத்து என்ற நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியதுதான்.

ராமானுஜர் ஏற்படுத்தி வைத்த அந்த பத்துக் கொத்துகளைப் பற்றி பார்ப்போமா?

முதல் கொத்து:
பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு வரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குதான் முதல் கொத்து என்று பெயர். ஸ்ரீரங்கத்தை ஒப்பிடுகையில் வெளியூர்களில் உயர்ந்தது திருப்பதி என்பதால் இதற்கு திருப்பதியார் கொத்து என்று பெயர். வெளியூர்களில் இருந்து வரும் வைணவ ஆசாரியர்களுக்கு மரியாதை அளிப்பதற்காக அவர்களுக்கு முதல் கொத்து என்பதை ஏற்படுத்தினார் ராமானுஜர்.

இரண்டாம் கொத்து”
இரண்டாம் கொத்து என்பது திருப்பணியார் கொத்து என்று அழைக்கப்படும். அதாவது திருமங்கை ஆழ்வார் காலத்திலிருந்தே ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த திருத்தாழ் வரை தாசர் வம்சத்தவர்களை இரண்டாம் கொத்து என்ற வகையில் வைத்தார்.

மூன்றாம் கொத்து:
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு தினப்படி ஆராதனம் செய்து வரும் ஐந்து கோத்திரங்களை சேர்ந்த பட்டாச்சாரியார்களை மூன்றாம் கொத்தில் இருக்க வைத்தார் ராமானுஜர்.

நான்காம் கொத்து:
பெருமாளுக்கு திரு ஆராதனம் செய்து வரும் பட்டாச்சாரியார்களுக்கு உதவியாக இருப்பவர்கள் நான்காம் கொத்தில் வைக்கப்பட்டனர். இந்த கொத்தில் உள்ளூர்காரர்களே இருப்பார்கள்.

ஐந்தாம் கொத்து”
இதற்கு விண்ணப்பஞ்செய்வார் கொத்து என்றும் பெயர் உண்டு. நாதமுனிகள் காலத்தில் இருந்து கோயிலில் ஆழ்வார்களின் அருளிச் செயலை பாடி விண்ணப்பம் செய்யும் அரையர்கள் இந்த கொத்தில் வைக்கப்பட்டனர்.

ஆறாம் கொத்து:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதற்கும் தினந்தோறும் ஆராதனம் செய்வதற்கும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வருவார்கள். அதற்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் ஆறாம் கொத்தில் வைக்கப்பட்டனர். தனது சிஷ்யர்களான திருவரங்க வள்ளலார், தூயமுனி வேழம் ஆகியோருக்கு இந்த கைங்கரியத்தை அளித்தார் ராமானுஜர்.

ஏழாம் கொத்து
ஸ்ரீரங்கம் கோயிலை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றரசர்களின் உதவி தேவை என்பதை ராமானுஜர் உணர்ந்திருந்தார். பல சிற்றரசர்கள் கோயிலுக்காக அதிக அளவிலான நிலங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த சிற்றரசர்களின் பிரதிநிதியாக இருக்கும் அந்தணர்களை சேர்த்து ஏழாம் கொத்து என்று அமைத்தார் ராமானுஜர்.

எட்டாம் கொத்து.
தினந்தோறும் பெருமாளுக்கு ஆராதனம் நடைபெறும்போது…நாலாயிர திவ்ய பிரபந்தம் வேதம், இதிகாசங்கள், புராணங்கள், சூத்திரங்கள், ஆகியவை வாசிக்கப்படும்.
மேலும் ஸ்ரீரங்க மகாத்மியம் என்ற இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பான பெருமை பேசும் நூலையும், வாசிக்கவும், கீர்த்தனைகள் பாடவும் இந்த எட்டாம் கொத்துகளில் உள்ளோர் நியமிக்கப்பட்டார்கள்.
ராமானுஜரின் முக்கிய சிஷ்யரான கூரத்தாழ்வான், எம்பார், திருவரங்கத்து அமுதனார் உள்ளிட்டோர் இந்த எட்டாம் கொத்தில் இருக்கிறார்கள்.

ஒன்பதாம் கொத்து:
கோயிலின் முக்கிய வாசல்களில் பாதுகாப்புக்காக இருக்கும் நபர்கள் ஒன்பதாம் கொத்தில் இருக்கிறார்கள்.

பத்தாம் கொத்து:
தொண்டரடி பொடியாழ்வார் காலம் தொடங்கி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு நந்தவனத்தில் இருந்து பூ பறித்து மாலை தொடுக்கும் பணியை செய்துவந்தவர்கள் புண்டரீகதாசர் பரம்பரையினர். இந்த பெருமைக்காக அவர்களுக்கு பத்தாம் கொத்து என்று ஏற்படுத்தி மாலை தயாரிக்கும் பணியை ஒப்படைத்தார் ராமானுஜர்.

இதெல்லாம் கோயிலுக்குள் நடைபெறும் காரியங்களுக்கான கொத்துகள். இந்த பத்துக் கொத்து தாண்டி இன்னொரு பத்துக் கொத்தையும் ஏற்படுத்தியிருந்தார் ராமானுஜர். அதையும் நாம் பார்ப்போம்.

இவ்வாறு ராமானுஜர் ஏற்படுத்தி வைத்த நிர்வாகக் கட்டமைப்பு இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கோயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பெருமாளுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ராமானுஜர்.

அவரது வழியில் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனரும், வைணவச் செம்மலுமான டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களும் பல விழாக் கொத்துகளை ஏற்படுத்தி வைணவத்தைப் பரப்பி வருகிறார்.

ராமானுஜரின் இன்னொரு பத்துக் கொத்தை இனி பார்ப்போம்.

விளம்பர பகுதி

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon