மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

ஐ.டி. பணிநீக்கம் : ஊழியர்களுக்கு வாய்ப்பு!

ஐ.டி. பணிநீக்கம் : ஊழியர்களுக்கு வாய்ப்பு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தங்களது வேலையை இழப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், இவர்களில் சுமார் 50 சதவிகிதத்தினர் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டு தங்களது வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேறு பிரிவுகளில் நிலைத்திருக்க இயலும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து CIEL HR நிறுவனம் நடுத்தர மற்றும் மூத்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ’தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது அதிகரித்து வரும் தானியங்கிமயத்தால் ஊழியர்களின் பணியில் 15 முதல் 20 சதவிகிதம் வரையிலான தேய்மானம் காணப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பேர் தங்களது வேலையை இழக்கும் சூழலில் உள்ளனர். இது கவலைக்குரிய விஷயம் தான். எனினும் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐ.டி. உள்கட்டமைப்பு ஆதரவு, சோதனை மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் பெரும்பாலும் பணிநீக்கம் இருக்கும். ஆனால், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஊழியர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 8 வருடங்களுக்குக் குறைவான அனுபவமுள்ள ஊழியர்கள் உட்பட ஐ.டி. நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்களில் சுமார் 50 சதவிகிதத்தினருக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்களது வாய்ப்புகளைப் பயன்படுத்தி இத்துறையின் வேறு பிரிவுகளில் கால்பதித்து நீடித்திருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், தானியங்கிமயம் மற்றும் அரசின் கொள்கைகள் மாற்றப்படுவது போன்ற காரணங்களால் வேலை பறிபோகும் என 33 சதவிகிதத்தினரும், மோசமான செயல்பாடுகள் காரணமாகப் பணிநீக்கம் தொடர்ந்து நடைபெறும் என 44 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon