மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

டிஜிட்டல் திண்ணை: ‘எடப்பாடி ரொம்பவும் பயப்படுறாரு’:தினகரன் வீட்டில் திடீர் மீட்டிங்!

டிஜிட்டல் திண்ணை: ‘எடப்பாடி ரொம்பவும் பயப்படுறாரு’:தினகரன் வீட்டில் திடீர் மீட்டிங்!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு, நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டவர்கள் இன்று காலை 11 மணியளவில் வந்தார்கள். அவர்களோடு சுரேஷ் அகரன் என்ற வழக்கறிஞரும் வந்தார். இந்த சுரேஷ் அகரன் மன்னார்குடியைச் சேர்ந்தவர். ‘தமிழ்நாடு முழுக்க உங்களுக்காக நாங்க கூட்டம் நடத்திட்டு இருந்தோம். மன்னார்குடியில்தான் முதன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்தாங்க. அதுக்குப் பிறகு இப்போ எங்கே கூட்டம் என அனுமதி கேட்டாலும் கொடுக்கிறது இல்லை. இதை இப்படியே விட்டுட்டா சரியா வராது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும். நீங்கதான் என்ன செய்யலாம்னு சொல்லணும்..’ என புகழேந்தி சொல்லியிருக்கிறார்.

‘மன்னார்குடி கூட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம்னு காவல் துறையில் சொன்னதும் நான் எஸ்.பி. வரைக்கும் பார்த்துட்டேன். ‘எங்களைத் தப்பா நினைச்சுக்காதீங்க.. மேலிடத்து உத்தரவு’ என்று அவர் சொன்னாரு. மேலிடம்னா நாங்கதானே... எங்களை மீறி யாரு மேலிடம் இருக்காங்கன்னு கேட்டேன். அவரு அமைதியா இருக்காரு. சென்னையில் இருந்து தகவல் சொல்லித்தான் போலீஸ் நமக்கு அனுமதி கொடுக்குறது இல்லை. நாம வளர்ந்துட்டு இருக்கோம் என்ற பயம் அவங்களுக்கு வந்துடுச்சு. அதனாலதான் நம்மை தடுக்குறாங்க. இனியும் நாம அமைதியா இருக்கக்கூடாது. கோர்ட்டுக்குப் போகலாம்..’ என வழக்கறிஞர் சுரேஷ் அகரன் சொன்னாராம்.

நாஞ்சில் சம்பத்தும் பேசி இருக்கிறார். ‘இந்த ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்த உங்களைவிட்டால் யாரு இருக்காங்க. அம்மா மாதிரி ஒரு பவர்ஃபுல் லீடர் இருந்த சீட்டுல எடப்பாடியையும், பன்னீரையும் உட்கார வெச்சுப்பார்க்க மனசு ஏத்துக்கவே இல்லைங்க. அது உங்களுக்கான இடம். அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்கன்னும் நாம அடங்கிப்போக வேண்டிய அவசியம் இல்லை..’ என்பது சம்பத்தின் கருத்து.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, ‘நான் அடங்கிப் போறதுக்காக அமைதியாக இல்லை. அதை நீங்கத் தெளிவாக புரிஞ்சுக்கணும். மன்னார்குடி கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததுமே நான் இங்கே பேசினேன். அந்தக் கூட்டத்துக்கான போஸ்டர்ல எடப்பாடி படத்தைப் போட்டதாலதான் அனுமதி கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. எடப்பாடிகிட்டயும் நான் பேசிட்டேன். அவரு ரொம்பவும் பயப்படுறாரு. அதனால நீங்க அமைதியா இருங்க. நானும் சொல்லி இருக்கேன். கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பாங்க. எடப்பாடி படம் இல்லாமல் நாம கூட்டம் நடத்துவோம். திரும்பவும் நான் சொல்றது ஒன்னே ஒண்ணுதான். இது நம்ம ஆட்சி. இதுக்கு நம்மால சிக்கல் வரக்கூடாது. சின்னம்மா இதை திரும்பத் திரும்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. ஏற்கெனவே என் மேல அவங்களுக்கு சில வருத்தங்கள் இருக்கு. இதையும் அவங்க சொல்றதை நான் கேட்கலைன்னா இன்னும் வருத்தம் அதிகமாகிடும். நாம சொல்ற எதையும் அவங்க கேட்கிறது இல்லைன்னு எனக்கும் கோபமும், வருத்தமும் இருக்கு. அதை நானும் சின்னம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனாலும் யோசிச்சு பார்த்தால், நாம அவங்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சி போயிட்டால், திரும்பவும் வருவது கஷ்டம். அப்புறம் எல்லோரும் கஷ்டப்படுவோம். அதனால பொறுமையா இருங்க...’ என்று தினகரன் சொன்னாராம்.

அதற்கு பெங்களூரு புகழேந்தி, ‘என்ன தலைவரே ஆகும்... ஆட்சி போனால் போகட்டும். திரும்ப எலெக்‌ஷன் வந்தால் நாம ஜெயிக்க முடியாது. 5 வருஷம் எதிர்க்கட்சியாக உட்காருவோம். கட்சியைப் பலப்படுத்தலாம்... ஒருவேளை கடந்த தேர்தலில் நாம ஜெயிக்காமல் இருந்தால், இப்போ எதிர்க்கட்சியாகத்தானே இருந்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சியாக இருந்தால் மக்கள்கிட்ட நிறையப் பேசலாம். அப்போதான் நாம வளர முடியும். அதனால துணிச்சலா ஒரு முடிவை எடுங்க...’ என வெளிப்படையாகப் பேசிவிட்டாராம். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தினகரன், ‘பொறுமையா இருங்க.. பேசலாம்!’ என சமாதானப்படுத்தி, வீட்டின் கேட் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஸ்டேட்டஸ் ஆக ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்தது. ”மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நக்மா நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் நிறைய சிக்கல் வந்தபடியே இருக்கிறது. நக்மா சென்னைக்கு வரும்போதெல்லாம் நிர்வாகிகள் யாருக்கும் சொல்வதில்லை. நக்மாவின் ஆதரவாளர் ஹசீனா சையத். அவருக்கு கட்சியில் மிக முக்கியப் பதவியை வாங்கித்தர முயற்சி செய்து வருகிறார் நக்மா. ஆனால், இது குஷ்புக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை. நக்மா மீதும், அவரது ஆதரவாளர் ஹசீனா மீதும் தமிழகத்தில் இருந்து தொடர்ந்து பல புகார்கள் டெல்லிக்கு போனபடியே இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரோ, ‘இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். நாம எதுக்கு தலையிடணும். அவங்களே சண்டை போடட்டும்.. சமாதானம் ஆகட்டும். நமக்கு என்ன வந்துச்சு..’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி இருக்கிறார். நக்மாவின் ஒட்டுமொத்த கவனமும் தமிழ்நாட்டை நோக்கியே திரும்பி இருக்கிறது. தமிழ்நாடுதான் நக்மாவின் டார்கெட் என்றும் சத்தியமூர்த்தி பவனில் பேச்சு வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்துள்ளது” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon