மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

நெய்வேலியிலிருந்து சென்னைக்கு குடிநீர்!

நெய்வேலியிலிருந்து சென்னைக்கு குடிநீர்!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நெய்வேலியிலிருந்து குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்குநாள் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குடிநீர் கேட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மக்களுக்குத் தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இந்த குடிநீர் தேவையைப் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு நீராதாரமாக இருந்து வந்த நான்கு ஏரிகளும் நீர் இல்லாமல் வறண்டு போயின. 4 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும்.

இதையடுத்து சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த 850 மில்லியன் லிட்டர் குடிநீர் 500 மில்லியன் லிட்டராகக் குறைந்தது. இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 7 ஆயிரம் லாரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தண்ணீர் பஞ்சம் குறையவில்லை. சில பகுதிகளில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையே லாரி தண்ணீர் கிடைக்கிறது. குடிநீருக்குப் பதிவு செய்து ஒரு வாரத்துக்குப் பின்னரே குடிநீர் கிடைக்கிறது. இதனால் சென்னையில் குடிசைப் பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையைச் சமாளிக்க திருவள்ளூர் மற்றும் நெய்வேலியில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னைக்கு நீராதாரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு போனதால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நெம்மேலி, காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் மாங்காடு பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், போரூர் ஏரியிலிருந்தும் குடிநீர் பயன்பாட்டுக்குத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மக்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இது தவிர நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை வீராணம் குழாய் வழியாகச் சென்னைக்கு கொண்டு வந்து விநியோகம் செய்து வருகிறோம்.

சென்னைக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தற்போது, 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon