மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

வருமான கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்!

வருமான கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்!

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி ஜூலை ஒன்றாம் தேதி அமலாகும் என்றும், நிறுவனங்களின் வசதிக்காக வருமான கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று (18-06-17) நடைபெற்ற ஜி.எஸ்.டி. ஆலோசனை கூட்டத்தில் ஜி.எஸ்.டியை அமல்படுத்துவதற்கு வழி வகுக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிகழ்வில், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்காக ஜூன் 30ஆம் தேதி ஜி.எஸ்.டி. குழு கூடுகிறது. அப்போதும் ஏனைய அனைத்து விவகாரங்கள் குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், வருமான கணக்கு தாக்கல் செய்வதில், வர்த்தகர்களுக்கு அவகாசம் அளிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட, வருமான கணக்கு தாக்கல் அட்டவணைப்படி, வர்த்தகர்கள், ஜூலை மாதத்துக்கான வருமான கணக்கை, ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் மாதத்துக்கான வருமான கணக்கை, செப்டம்பர் 10ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,''ஜூலையில், ஜி.எஸ்.டி., அமலாவதால், அதற்குத் தயாராகாத வர்த்தகர்களுக்குத் தளர்வு அளிக்கும் வகையில், கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல், முந்தைய கால அட்டவணைப்படி, வர்த்தகர்கள் தங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார். இதற்கிடையே, மாநில அரசுகளால் நடத்தப்படும் லாட்டரி சீட்டுகள் மீதான வரியை, 12 சதவிகிதமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் லாட்டரி சீட்டுகள் மீதான வரி, 28 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon