மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தலித் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்போமா?

தலித் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்போமா?

விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை(இன்று) சென்னையில் உள்ள அசோக்நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனாதிபதி வேட்பாளரை உள்நோக்கத்தோடு பாஜக அறிவித்திருக்க கூடும் என்று கருதுகிறோம்.

ஆகவே, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள், மத சார்பற்ற சக்திகள், மிக கவனமாக இதை கையாள வேண்டும். புரட்சிகர ஜனநாயக சிந்தனையுள்ள ஒரு தலித் சமுகத்தை சார்ந்த வேட்பாளரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.

வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர்.அதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.ஆனால் அதற்கு கிடைத்த பரிந்துரைகளை அவர்கள் இன்னும் பரிசிலிக்கவில்லை என்று கருதுகிறேன். தற்போதைய வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத்தலைவராக வெற்றிபெற வைத்து, தலித்துகளுக்கு எதிரான நிலைபாடுகளுக்கு அவருடைய ஒத்துழைப்பை எளிதாக பெற முயற்சிக்கலாம்.

அப்துல்கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை குஜராத்தில் கட்டவிழ்த்து விட்டார்கள். அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தையும் நடத்தினார்கள். எனவே ராம் நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவராக்கிவிட்டு 'கர்வப்சி'யை சட்டமாக மாற்றினாலும் மாற்றுவார்கள். மேலும்,அரசியலமைப்பு சட்டத்தையும் மாற்ற முயற்சிப்பார்கள். இதைத்தொடந்து மதமாற்ற தடைச்சட்டத்தையும் கொண்டுவர வாய்ப்புண்டு. ஆகவே, தலித் மக்களின் நல்லெண்ணத்திற்காகத்தான் இந்த தேர்வை செய்திருப்பார்கள் என்று எங்களால் ஏற்க இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon