மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : முதல்வர் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : முதல்வர் அறிவிப்பு!

கிராமப்புற மாணவர்கள் இடை நிற்றல் இன்றி உற்சாகமாகப் பள்ளிகளுக்கு வருவதற்குச் செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துதல், ஆங்கில பயிற்சி போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3090 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (ஜூன், 19) அறிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார். அதில், "அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய சாதனங்களும் வழங்கப்படும். இதற்கு அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

கிராமப்புற மாணவர்களுக்காக முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும். காஞ்சிபுரத்தில் 15 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ”புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும்

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் இந்த வசதியினால் பயன் பெறுவார்கள் எனச் சட்டசபையில் இன்று(ஜூன்,19) அறிவித்துள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon