மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்: நீதிபதி, வக்கீல்களுக்கு லஞ்சம்!

முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்: நீதிபதி, வக்கீல்களுக்கு லஞ்சம்!

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிமீது பதிவு செய்யப்பட பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக நீதிபதி மற்றும் வக்கீல்களுக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜ்வாடி ஆட்சியில் அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரது மகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து, பிரஜாபதி உள்பட 6 பேர் மீது கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, உ.பி.மாநில போலீசார் காயத்ரி பிரஜாபதியை தேடிவந்தனர். சுமார், 1 மாதத்திற்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த பிரஜாபதி கடந்த மார்ச் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு நீதிபதி ஒ.பி. மிஸ்ரா இந்த வழக்கு விசாரணையில், முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கினார். பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திலிப் போஸ்லே விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் ஜாமீன் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் பிரஜாபதி ரூ. 10 கோடி லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. அதில், 3 வக்கீல்கள் இடைத் தரகர்களாக செயல்பட்டதில் அவர்களுக்கு 5 கோடி வழங்கப்பட்டதாகவும், நீதிபதி மிஸ்ரா மற்றும் மாவட்ட நீதிபதி ராஜேந்திர சிங் ஆகியோருக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. பாலியல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதிகளே லஞ்சம் வாங்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon