மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

உயிருள்ள குழந்தையை பார்சல் செய்த மருத்துவமனை!

உயிருள்ள குழந்தையை  பார்சல் செய்த மருத்துவமனை!

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டதாக பார்சல் செய்து கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பதார்பூரைச் சேர்ந்தவர் ரோஹித் குமார் (33). தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சாந்தி தேவி(28). சாந்தி தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அரசு நடத்தும் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். நேற்று (ஜூன்,18) காலை 5 மணி அளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 24 வாரத்தில் பிறந்ததால் 460 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அங்கிருந்த மருத்துவர்களும் ஊழியர்களும் குழந்தையிடம் அசைவு இல்லை, குழந்தை இறந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையை பார்சல் செய்து, இறந்துவிட்டதாக முத்திரை குத்தி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உடல்நிலை சரியாகாததால் குழந்தையின் தாய் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தார் வீட்டுக்குச் சென்றனர்.

இந்நிலையில், ரோஹித்தின் சகோதரி, குழந்தை வைக்கப்பட்டிருந்த பார்சலில் குழந்தையின் அசைவை உணர்ந்தார். உடனே குடும்பத்தார் பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தை சுவாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக குழந்தையை சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் தவறை ஒப்புக் கொண்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை ரோஹித், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதில், குழந்தையைப் பரிசோதிக்காமலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது. அவர்களின் கவனக்குறைவுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய சஃப்தார்ஜங் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே.ராய், ’ பணியில் இருந்த ஊழியர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல், குழந்தைக்கு உயிர் இருந்ததை அறியாமல் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தை 460 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. இது தரநிலைகளுக்கு ஏற்றதாக இல்லை. இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் அரிதாகவே தான் உயிர் பிழைக்கும். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவு ஒரு வாரத்துக்குள் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மூன்று மாத குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ஆம்புலன்சில் எரிபொருள் காலியானதால் நடுவழியில் நின்றது. இதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon