மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

விவசாயக் கடன் : யாருக்கு - எவ்வளவு?

விவசாயக் கடன் : யாருக்கு - எவ்வளவு?

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முழக்கம் எழுந்து வருகிறது. வறட்சியாலும், போதிய விலை கிடைக்காமலும் வாடும் விவசாயிகள் வாழ்வாதாரமின்றி அரசிடம் நிவாரணம் கோரி வருகின்றனர். உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்து, பின்னர் போராட்டத்தில் இறங்கினர். விவசாயக் கடன் தள்ளுபடி செய்தால் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று ஒரு தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற கடன் குறித்த விவரங்களைக் காணலாம்.

கடந்த 2013ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டிலுள்ள மொத்த விவசாயக் குடும்பங்களில் பாதிக்கும் மேல் விவசாயக் கடன் பெற்று பாக்கி வைத்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் அதிக விவசாயக் குடும்பங்கள் கடன்பட்டுள்ளன. இதில், ஆந்திராவில் 93 சதவிகித குடும்பங்களும், தெலங்கானாவில் 89 சதவிகிதக் குடும்பங்களும், தமிழகத்தில் 83 சதவிகிதக் குடும்பங்களும், கேரளாவில் 78 சதவிகிதக் குடும்பங்களும், கர்நாடகாவில் 77 சதவிகிதக் குடும்பங்களும் கடன்பட்டுள்ளன.

மேலும், 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 48 சதவிகிதத்தினரும், 1 முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 56 சதவிகிதத்தினரும், 10 ஹெக்டேருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 79 சதவிகிதத்தினரும் கடன்பட்டுள்ளனர். மேற்கூறியதில் முதல் பிரிவினர் பட்டுள்ள கடன் மொத்தமாக ரூ.30,000 கோடி, இரண்டாம் பிரிவினர் பட்டுள்ள கடன் ரூ.55,000 மற்றும் கடைசிப் பிரிவினர் பட்டுள்ள கடன் ரூ.2.9 லட்சம் கோடி.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon