மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி!

தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

“ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். ஒத்திவைத்து அமல்படுத்த நம்மிடம் போதிய நேரம் இல்லை” என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். ஜிஎஸ்டி சட்டத்தை முறையாக ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஜூன் 19 திங்கள்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி பற்றிய விவாதத்துக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த பின் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஜிஎஸ்டியை நிறைவேற்றுவதற்கு முன் வணிகர்களை அழைத்து அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொழில் அமைப்புகள் மற்றும் வணிகர்களிடம் அரசு கருத்து கேட்கவில்லை. ஜிஎஸ்டி மசோதா மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், அதை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை கேட்ட பிறகுதான் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் தமிழக அரசு அவ்விதம் செய்யவில்லை. மசோதாவை இப்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என அவர் கூறினார்.

ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் எம்.எல்.ஏ பேசுகையில், “புரிதல் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். ஜிஎஸ்டியால் வணிகவரி 4,400 கோடி ரூபாய் அதிகரிக்கும்” என அவர் கூறினார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon