மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

வேகத்தடைகள்: தினமும் 9 பேர் உயிரிழப்பு!

வேகத்தடைகள்: தினமும் 9 பேர்  உயிரிழப்பு!

இந்தியாவில் சரியான வடிவமைப்பில்லாத வேகத்தடைகளால் நாளொன்றுக்கு 30 விபத்துக்களும், 9 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியிலும், ஆபத்து நிறைந்த பகுதியிலும் நடைபெறும் விபத்துக்களைத் தடுக்க வேகத்தடை அமைக்கப்படுகின்றன. ஆனால், விபத்துக்களைத் தடுக்க வேண்டிய வேகத்தடைகளே விபத்துக்குக் காரணமாக அமைகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து அரசு வேகத் தடைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கணக்கு எடுத்து வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வேகத்தடைகளால் ஏற்பட்ட விபத்தில் 3,409 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் 2,937 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியாவில் நாள்தோறும் வேகத்தடைகளால் 30 விபத்துக்களும், 9 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தரமற்ற கட்டுமானப் பொருட்கள், முறையற்ற வடிவமைப்பு போன்றவை விபத்துகளுக்கான காரணமாக அமைகின்றன.

இது நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டிலுள்ள பெரும்பாலான வேகத்தடைகள் வாகன ஓட்டிகளின் எலும்புகளையும், வாகனங்களையும் சேதப்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சரியான மதிப்பீட்டுக்குப் பின்னரே நியமிக்கப்பட்ட இடத்தில் வேகத்தடை அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். கிராமப்புறங்களில், ஒவ்வொரு 100 மீட்டருக்கும், குறிப்பாக உள்ளூர் தலைவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில் வேகத்தடை அமைக்கப்படும். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதியில் பெரியளவில் விபத்துகள் நிகழ்ந்தபின், அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அமைக்கப்படும் வேகத்தடைகள் சில சமயங்களில் பாதுகாப்பானதாக அமைவதில்லை என சாலை பாதுகாப்பு ஆலோசகர் பி. பஹதூர் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் சாலைகளின் நிலையும் மிக மோசமாக இருக்கிறது. சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நாடு முழுவதும் குழிகளால் மட்டும் 10.876 விபத்துக்கள் நடந்துள்ளது. குழிகள் காரணமாக 2014 ஆம் ஆண்டில் 3,039 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 3,416 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon