மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

3000 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் குறையாத மது விற்பனை!

3000 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் குறையாத மது விற்பனை!

சட்டப்பேரவையில் இன்று ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட மது விற்பனை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பின் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்து வந்த வருமானம் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் மது விற்பனை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், டாஸ்மாக் மது விற்பனை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய, மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் 500 மீட்டருக்குள் இருந்த 3,321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூலம் 2016-17 ஆம் ஆண்டில், 26 ஆயிரத்து 995.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கடந்த 2015-16 ஆம் ஆண்டைவிட தமிழக அரசின் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ. 1,149.97 கோடி அதிகம் என்று தெரியவந்துள்ளது. 3,321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டும், ரூ. 1,149.97 கோடி வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon