மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு என இரு தரப்பிலிருந்தும் சரியான பதில் தரப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு அளித்துள்ள பதிலில், ‘இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.' என்று தகவல் அளித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இன்னும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதனால் முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜூன் 19ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதமே அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் அதற்கு வைரகண்ணன் தரப்பு வழக்கறிஞர்,'பணப்பட்டுவாடா தொடர்பான எப்ஐஆர் முழுமையாக இல்லையென்றும்,யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும்' தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி,' தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்திருந்தபோதும் ஏன் அவ்வாறு செய்யவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது என்ன செய்வீர்கள்' என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், இரு தரப்பிலிருந்தும் சரியான பதில் தரப்படவில்லை. எனவே வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையின் மூலமாகத்தான் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே வருமான வரித்துறையின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon