மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

பால் உற்பத்தியாளர் வருவாயை உயர்த்திய அமுல்!

பால் உற்பத்தியாளர் வருவாயை உயர்த்திய அமுல்!

கடந்த ஏழு வருடங்களில் தங்களது பால் உற்பத்தியாளர்களின் வருவாயை நான்கு மடங்கு உயர்த்தியுள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு நிறுவனமானது அமுல் பிராண்டு பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் விற்று-முதல் (Turn - over) நடந்து முடிந்த 2016-17 நிதியாண்டில் ரூ.38,000 கோடியைத் தொட்டது. இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களில் அமுல் நிறுவனம் எருமைப் பாலை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வழங்கும் தொகையை (2009ஆம் ஆண்டு) லிட்டருக்கு ரூ.24.30லிருந்து, (2017ஆம் ஆண்டு) ரூ.49 ஆக உயர்த்தியுள்ளது.

அதேநேரத்தில் அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவும் 90.9 லட்சம் லிட்டரிலிருந்து 176.5 லட்சம் லிட்டராக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களின் வருவாயும் கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (13-06-17) நடந்த 43ஆவது வருடாந்திரக் கூட்டத்தில் அமுல் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டது. இதுகுறித்து அமுல் நிறுவனத் தலைவர் ஜெதபாய் படேல் கூறுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளில் பால் கொள்முதலில் 96 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். நீண்டகால அடிப்படையில் எங்களது நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார். தற்போது அமுல் பிராண்டு சர்வதேச அளவில் 13ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கும் திட்டத்திலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் 13 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon