மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு: பாஜக!

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு: பாஜக!

பாஜக சார்பான குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு ஜுன் 19-ம் தேதி கூடியது.

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதான குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக நடவடிக்கை எடுத்தது. இதற்காக பாஜக தரப்பில் குழு அமைக்கப்பட்டு காங்கிரஸ் தேசிய தலைவரான சோனியா காந்தி உள்பட பல எதிர்கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை குழுவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் இருந்தனர். ஆனால் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்புதல் பாஜகவுக்கு கிடைப்பதுபோல் தெரியவில்லை. மேலும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாஜக தரப்பு வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரையை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வரவழைத்து ஆதரவு கோரியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலுக்கு பாஜக தரப்பு வேட்பாளர் யார் என்பது ஜூன் 23-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் தெரிவித்திருந்தார். “குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பாக என் மனதில் சில பெயர்கள் இருந்தாலும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுதான் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கப்படும்” என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூன் 19-ம் தேதி குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பாஜக ஆட்சி மன்றக்குழு கூடியது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்து ஆலோசிக்க கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி வர கட்சி தலைமை உத்தரவிட்டது. இந்த ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “பாஜக தரப்பு குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியபின் காங்கிரஸ் தன் முடிவை அறிவிக்கும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக ராம் நாத் கோவிந்த் பணியாற்றியிருக்கிறார். துணை ஜனாதிபதி பற்றி நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை” என அவர் கூறினார்.

தலித் தலைவரான ராம் நாத் கோவிந்த் கடந்த மூன்று வருடங்களாக பீகார் ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு வயது 71 ஆகிறது. உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர், 1994 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சட்டம் படித்த இவர் வழக்கறிஞராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு குடியரசு தலைவராகும் இரண்டாவது தலித் தலைவர் என்ற பெயர் இவருக்கு கிடைக்கும்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில், “தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “ராம்நாத் கோவிந்த் ஒரு விவசாயியின் மகன். ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட்ட இவர், அவர்களுக்காக தன் வாழ்கையை அர்பணித்திருக்கிறார். சட்ட அரங்கில் அனுபவம் பெற்ற இவரின் அறிவாற்றலும், அரசியலமைப்பு பற்றிய புரிதலும் நாட்டுக்கே பயனளிப்பதாக இருக்கும். ராம் நாத் கோவிந்த் ஒரு சிறந்த ஜனாதிபதியாக திகழ்ந்து, ஏழைகளின் நலனுக்காக தொடர்ந்து உழைப்பார் என நான் நம்புகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடனும் பேசியுள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon